‘கஜா’ புயலால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பாதிப்பு: 6 லட்சம் தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தன


‘கஜா’ புயலால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பாதிப்பு: 6 லட்சம் தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தன
x
தினத்தந்தி 19 Nov 2018 4:30 AM IST (Updated: 19 Nov 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

‘கஜா’ புயலால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 6 லட்சம் தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தன. 45 ஆயிரம் மின்கம்பங்களும் கீழே விழுந்தன.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் 150 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கிய ‘கஜா’ புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் மாவட்டத்தை சீர்குலைத்து புரட்டி போட்டு விட்டது. லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்து உள்ளது.

இந்த நிலையில் கஜா புயலால் மாவட்டம் முழுவதும் என்னென்ன பாதிக்கப்பட்டுள்ளது என்று புதுக்கோட்டை வேளாண்மைத்துறை சார்பில் முதல் கட்டமாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் கஜா புயல் தாக்கியது. இதனால், மாவட்ட மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். 6 லட்சம் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. மேலும் 36 ஆயிரம் பலா மரங்கள், 500 ஏக்கரில் உள்ள மா மரங்கள், 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், 4 ஆயிரம் ஏக்கர் வாழை மரங்கள், 3,500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, 5 ஆயிரம் ஏக்கர் முந்திரி, 3 ஆயிரம் ஏக்கர் மக்காச்சோளம், 650 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த எலுமிச்சை, 400 ஏக்கர் மிளகு, 1,500 ஏக்கர் மரவள்ளி, 200 ஏக்கர் உளுந்து பயிர், 600 ஏக்கர் மலர்சாகுபடி ஆகியன புயலால் சூறையாடப்பட்டு சேதமானது. மேலும் 8 ஆயிரம் புளியமரங்கள், 1 லட்சம் தேக்கு மரங்கள் அனைத்தும் வேரோடு சாய்ந்து விட்டன.

இதுமட்டுமல்லாது பல்லாயிரக்கணக்கான சவுக்கு மரங்கள், மூங்கில், முருங்கை மரங்களும் புயலுக்கு தாக்குபிடிக்க முடியாமல் வேரோடு சாய்ந்து நாசமானது. அத்துடன் பல்லாயிரக்கணக்கான பப்பாளி, யூகலிப்டஸ் மரங்கள், பல்வேறு வகையான தோட்டப்பயிர்கள், காய்கறி தோட்டங்கள் மற்றும் ரூ.5 கோடி மதிப்பிலான பசுமை குடில்கள், மேல்வலை கூடங்கள், அனைத்து வகையான நாற்றுகள் கஜா புயலுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர மாவட்டம் முழுவதும் 45 ஆயிரம் மின்கம்பங்கள் புயலால் பாதிப்பு அடைந்து சாய்ந்து விட்டன. மேலும் லட்சக்கணக்கான ஓட்டு வீடுகள், கூரை வீடுகள், ஆஸ்பெஸ்டாஸ் வீடுகள் மற்றும் கடை நிறுவனங்கள், பள்ளி-கல்லூரிகளில் உள்ள மேற்கூரைகள், மாட்டு கொட்டைகளும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மின் கம்பங்கள் சீரமைக்கும் பணி படிப்படியாக நடந்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ், அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், கே.சி.கருப்பண்ணன், பாஸ்கரன் மற்றும் வீட்டு வசதித்துறை தலைவர் வைரமுத்து, செந்தில்நாதன் எம்.பி., ஆறுமுகம் எம்.எல்.ஏ, வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை முதன்மை செயலாளர், தொழிலாளர்துறை முதன்மை செயலாளர் ஆகியோர் முன்னின்று புயல் பாதித்த பகுதிகளில் முனைப்புடன் நிவாரண பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Next Story