திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தகவல்


திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தகவல்
x
தினத்தந்தி 19 Nov 2018 4:30 AM IST (Updated: 19 Nov 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அமைக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்,

கூட்டுறவுத்துறையின் சார்பில் 65–வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா திருப்பூர்–பல்லடம் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். விழாவில் 377 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 88 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கான பாராட்டு கேடயங்கள் ஆகியவற்றை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கி பேசியதாவது:–

திருப்பூர் மாவட்டத்தில் 789 கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இதில் மொத்தம் 6 லட்சத்து 65 ஆயிரத்து 964 உறுப்பினர்கள் உள்ளனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 2018–2019 ஆண்டில் 21 ஆயிரத்து 855 உறுப்பினர்களுக்கு ரூ.202 கோடியே 31 லட்சம் பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. 450 உறுப்பினர்களுக்கு ரூ.4 கோடி மத்திய கால கடனாக வழங்கப்பட்டுள்ளது. ரூ.342 கோடி பொது கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது. ரூ.7 கோடி தானிய ஈட்டுக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற ஏராளமான நலத்திட்டங்கள், கடன் உதவிகள் செய்யப்பட்டுள்ளது. கோவை மற்றும் ஈரோட்டில் உள்ள பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தினை பிரித்து திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு தமிழக முதல்–அமைச்சர் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இந்த விழாவில் 377 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 88 லட்சத்து ஆயிரத்து 62–க்கு நலத்திட்ட உதவியும், மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சிறந்த பொதுவினியோக திட்ட விற்பனையார் மற்றும் கட்டுனர்கள் என 45 பேருக்கு பாராட்டு கேடயம், இந்த விழாவையொட்டி நடந்த கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற 20 பள்ளி மாணவ–மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார்.

முன்னதாக ஆவின் நிறுவனம், கதர் கிராம தொழில்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை அமைச்சர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் சத்திய பாமா எம்.பி, எம்.எல்.ஏக்கள் கரைப்புதூர் நடராஜன், குணசேகரன், கே.என்.விஜயகுமார் மற்றும் கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய தலைவர் கே.பி.ராஜூ, கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் பிரபு, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் வெங்கடேசன், கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் பழனி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:–

கஜா புயலால் பல இடங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளுக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சென்று நிவாரண பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 1660 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், செத்துப்போன கால்நடைகளுக்கும், பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கும் வழங்கப்படும் இழப்பீடு குறித்த அறிவிப்பையும் முதல்–அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

அதை அந்தந்த பகுதிகளில் உள்ள கால்நடைத்துறை இணை இயக்குனர், மாவட்ட கலெக்டர்கள் கணக்கெடுத்து அரசுக்கு அறிக்கை அளித்து வருகின்றனர். மக்களுக்கு சேவை செய்வதில் தமிழக அரசு என்றைக்கு சோர்வடைந்தது இல்லை. ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான நிவாரணம் சென்றடையவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவதை ஏற்று கொள்ள முடியாது. அவர் செய்திகளில் தன்னுடைய பேச்சு இடம்பெறுவதற்காக ஏதாவது கருத்துகளை சொல்லி கொண்டே இருப்பார். ஆனால் தொடர்ந்து தமிழக அரசு மக்கள் நலனுக்காக பாடுபடும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story