பெரம்பலூர் அருகே முட்புதரில் கழுத்தறுத்த நிலையில் வாலிபர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை


பெரம்பலூர் அருகே முட்புதரில் கழுத்தறுத்த நிலையில் வாலிபர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 19 Nov 2018 4:30 AM IST (Updated: 19 Nov 2018 1:26 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் அருகே முட்புதரில் கழுத்தறுத்த நிலையில் வாலிபர் இறந்து கிடந்தார். அவரை யாரேனும் கழுத்தறுத்து கொலை செய்திருக்கலாம்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே உள்ள நொச்சியம் கிராமத்தில் இருந்து விளாமுத்தூருக்கு செல்லும் சாலை பகுதியில் அடர்ந்த முட்புதரில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாகவும், மேலும் அவரது காலடியில் கத்தி ஒன்று ரத்த கறையுடன் கிடப்பதாகவும் பெரம்பலூர் போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர்.

மர்மமான முறையில் ஒருவர் இறந்து கிடப்பது குறித்த தகவல் நொச்சியம் கிராமத்தில் காட்டுத்தீ போல பரவியதால், அந்தப்பகுதியில் பொதுமக்கள் கூடினர். அப்போது இறந்தவர் யார்? என்று கூடியிருந்த பொதுமக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

முட்புதரில் இறந்து கிடந்தவர் நொச்சியம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேகரின் மகன் முனுசாமி (வயது 27) என்பதும், அவர் கொத்தனார் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இறந்து கிடந்த முனுசாமி உடல் உப்பிய நிலையிலும், அழுகிய நிலையிலும் காணப்பட்டதால், அவர் இறந்து ஓரிரு நாட்கள் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதையடுத்து போலீஸ் மோப்ப நாய் நிஞ்சா வரவழைக்கப்பட்டது. நிஞ்சா முனுசாமியின் காலடியில் கிடந்த கத்தியில் படிந்திருந்த ரத்தத்தை மோப்பம் பிடித்து விளாமுத்தூருக்கு செல்லும் சாலை வரை ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதையடுத்து விரல்ரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து முனுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இறந்து கிடந்த முனுசாமியின் காலடியில் ஒரு கத்தி ரத்த கறையுடன் கிடந்ததாலும், அவரது காலணி சம்பவ இடத்திற்கு சிறிது தூரத்திலே கிடந்ததாலும், அவரே யாரேனும் அழைத்து வந்து கழுத்தறுத்து கொலை செய்திருக்கிலாம்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்தில் கிடந்த ரத்தக்கறை படிந்த கத்தி மற்றும் காலணியை போலீசார் கைப்பற்றினர். மேலும் முனுசாமி பயன்படுத்திய செல்போனில், அவர் யாருக்கெல்லாம் பேசியிருக்கிறார் என்றும், அவர்களிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story