திருவாடானை தாலுகாவில் கடற்கரை கிராமங்களில் தாசில்தார் ஆய்வு


திருவாடானை தாலுகாவில் கடற்கரை கிராமங்களில் தாசில்தார் ஆய்வு
x
தினத்தந்தி 19 Nov 2018 4:45 AM IST (Updated: 19 Nov 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானை தாலுகாவில் உள்ள கடற்கரை கிராமங்களில தாசில்தார் ஆய்வு மேற்கொண்டார்.

தொண்டி,

திருவாடானை தாலுகாவில் தொண்டி மற்றும் கடற்கரை கிராமங்களில் கஜா புயல் காரணமாக பாதிப்புகள் உள்ளனவா என்பது குறித்து மாவட்ட கலெக்டர் வீர ராகவ ராவ் உத்தரவின்படி தாசில்தார் சேகர் நேரில் ஆய்வு செய்தார். திருவாடானை தாலுகாவில் கடற்கரை கிராமங்களான காரங்காடு,முள்ளிமுனை, புதுப்பட்டினம்,கண்கொள்ளான்பட்டினம்,சோளியக்குடி,சிங்காரவேலர் நகர்,சம்பை, நம்புதாளை, தொண்டி,எம்.ஆர்.பட்டினம்,பி.வி.பட்டினம்,நாரேந்தல்,வட்டாணம்,தாமோதரன் பட்டினம்,பாசிப்பட்டினம், தீர்த்தாண்டதானம், எஸ்.பி.பட்டினம் மற்றும் மோர்பண்ணை,திருப்பாலைக்குடி போன்ற கடற்கரை கிராமங்களுக்கு சென்ற தாசில்தார் சேகர் அங்கு பொதுமக்களை நேரில் சந்தித்து மழை பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் பொதுமக்களுக்கு ஏதேனும் கோரிக்கை இருந்தால் அதனை மனுக்களாக வழங்கினால் அதன் மீதுஉரிய விசாரணைக்கு பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

அப்போது காரங்காடு கிராமத்தில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த போது பொதுமக்கள் இந்த கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருவதாகவும் குடிநீர் பிரச்சினை அதிகஅளவில் நீண்ட காலமாக இருந்து வருகிறது எனவும், இதனால் பொதுமக்கள் சிரமங்களை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தாசில்தார் உடனடியாக காவிரி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மேலும் அனைத்து கிராமங்களிலும் விளக்குகள் கழிப்பறை, குடிநீர் தண்ணீர் போன்ற தேவையான அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்தார். இதேபோல் நம்புதாளை,முள்ளிமுனை கிராமங்களில் உள்ள பல்நோக்கு பேரிடர் பாதுகாப்பு புயல் காப்பகம் ஆகியவற்றை பார்வையிட்டார்.

அதன்பின்னர் திருவாடானை தாலுகாவில் மழை காரணமாக சுமார் 11 வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் இதுகுறித்து வருவாய் ஆய்வாளர்,கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் மூலம் உரிய விசாரணை நடத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்றும் தாசில்தார் தெரிவித்தார். அவருடன் துணை தாசில்தார் முருகேசன்,வருவாய் ஆய்வாளர்கள்,கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

Next Story