கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு அதிகாரிகள் கூட செல்லாத நிலை உள்ளது - த.மா.கா. கண்டனம்
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பல கிராமங்களுக்கு அதிகாரிகள் கூட செல்லாத நிலை உள்ளது என்று த.மா.கா. சார்பில் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்,
த.மா.கா. மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:– கஜா புயல் தமிழகத்தில் எதிர்பார்த்ததை விட 7 மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டுவிட்டது. பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் வாழ்வாதாரத்தையும் இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். தென்னை, பலா போன்ற விவசாய ஆதாரங்களை மீட்டெடுக்க 10 ஆண்டுகளுக்கு மேலாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கஜா புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கையில் தமிழக அரசு நகர்ப்புறங்களில் காட்டிய அக்கறை கிராமப்புறங்களில் காட்ட தவறி விட்டது. இதனால் கிராம பகுதிகளில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான கிராமங்களில் குடிநீர், மின்சாரம், தகவல் தொடர்பு போன்றவை இதுவரை கிடைக்கவில்லை. அரசு தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த கணக்கெடுப்பு நடந்து இழப்பீடு கிடைப்பதற்கு பலமாதங்கள் ஆகும்.
எனவே, உடனடியாக தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். கஜா புயலால் இறந்தவர்களுக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.10 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார். இது குறைவான தொகையாகும். ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளன. இவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒருசில பகுதியில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் பல நூறு கிராமங்களுக்கு அமைச்சர்கள் மட்டுமல்ல அதிகாரிகள்கூட இதுவரை செல்லாத நிலை உள்ளது. அரசு எந்திரம் எட்டிப்பார்க்காத பகுதிகளாக உள்ளன. இதனால் இந்த பகுதி மக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.தன்னார்வலர்கள் வழங்கும் பொருட்களை வைத்து நாட்களை கழித்து வருகின்றனர். முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 2 லட்சத்து 94 ஆயிரம் பேர் திருப்பி அனுப்பப்பட்டாலும் அவர்கள் வசிக்க இடமில்லாத நிலை உள்ளது. மீண்டும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அரசு நிவாரண பணிகளை கிராம பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்.
பாதிப்பை கருத்தில் கொண்டு முதல்கட்டமாக ரூ.500 கோடி நிதியை மத்திய அரசிடம் கேட்டுப்பெற்று பணிகளை முடுக்கி விட வேண்டும். கேரளாவில் பெருமழை ஏற்பட்டு பாதிக்கப்பட்ட சமயத்தில் பிரதமர் மோடி ரூ.500 கோடி நிதியை மட்டும் கொடுத்து ஏமாற்றியது போல தமிழகத்தையும் ஏமாற்றிவிடுவார் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதனை தவிர்க்கும் பொருட்டு தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுத்து தேவையான நிதியை பெற்று நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும். சபரிமலை அய்யப்பன்கோவில் விவகாரத்தில் கேரள அரசு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார். அப்போது மாவட்ட தலைவர் ரவிச்சந்திரராமவன்னி உடன் இருந்தார்.