கோமுகி அணை நிரம்பி வருவதால் சம்பா சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள்


கோமுகி அணை நிரம்பி வருவதால் சம்பா சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள்
x
தினத்தந்தி 19 Nov 2018 4:00 AM IST (Updated: 19 Nov 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணை நிரம்பி வருவதால், அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சம்பா சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கச்சிராயப்பாளையம்,

கச்சிராயப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாகும். இப்பகுதி விவசாயிகளில் பெரும்பாலானோர் கோமுகி அணையை நம்பியே பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். 46 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் மூலம் 11 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

கல்வராயன்மலை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழைநீர் பொட்டியம், கல்படை, மல்லிகைப்பாடி ஆகிய ஆறுகளின் வழியாக இந்த அணைக்கு வருகிறது.

போதிய மழையின்றி வறண்டு காணப்பட்ட கோமுகி அணை, கடந்த மாதம் தொடக்கத்தில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் 34 அடியை எட்டியது. இதையடுத்து கடந்த மாதம் 29-ந் தேதி விவசாய பாசனத்துக்காக கோமுகி அணையில் இருந்து பழைய மற்றும் புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் அணை முழுகொள்ளளவை எட்டாததால் ஒரு சில விவசாயிகள் மட்டுமே காய்கறி உள்ளிட்ட குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்திருந்தனர். பெரும்பாலான விவசாயிகள் சம்பா சாகுபடி பணியில் ஈடுபடாமல் வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி காத்திருந்தனர்.

இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான ‘கஜா’ புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மேலும் கல்வராயன்மலை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையால் பொட்டியம், கல்படை மற்றும் மல்லிகைப்பாடி ஆகிய ஆறுகளின் வழியாக கோமுகி அணைக்கு தண்ணீர் வந்தது. இந்த தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 38 அடியை எட்டியது. அணையில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இதனால் கோமுகி அணை பாசன விவசாயிகள், சம்பா சாகுபடிக்காக தங்களது நிலங்களை டிராக்டர் மூலம் உழுது நாற்று நடும் பணியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கோமுகி அணையில் தற்போது 38 அடிக்கு தண்ணீர் உள்ளது. இந்த அளவு தண்ணீர் சம்பா பாசனத்துக்கு போதுமானதாகும். எனவே தான் தற்போது சம்பா சாகுபடிக்கு எங்களை தயார் செய்து வருகிறோம். சில இடங்களில் நடவு பணியும் தொடங்கிவிட்டது. விரைவில் அணையின் பாசன பகுதியை சார்ந்துள்ள விவசாய நிலத்தில் சம்பா நடவு பணி முழுமையாக நடந்து முடியும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.


Next Story