மின்பழுதுகளை சரிசெய்ய புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கூடுதலாக 2 ஆயிரம் பணியாளர்கள் அமைச்சர் பேட்டி


மின்பழுதுகளை சரிசெய்ய புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கூடுதலாக 2 ஆயிரம் பணியாளர்கள் அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 19 Nov 2018 4:30 AM IST (Updated: 19 Nov 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

மின்பழுதுகளை சரிசெய்ய புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 2 ஆயிரம் பணியாளர்கள் கூடுதலாக வர உள்ளனர் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கதர் மற்றும் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் தலைமையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலினால் ஏற்பட்டுள்ள மின்தடையை சீர்செய்து, துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு, உடனடியாக மின் வினியோகம் வழங்குவது குறித்தும், இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவர் வைரமுத்து, தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக்கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் விக்ரம் கபூர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் சுனில் பாலிவால், சம்பு கல்லோலிக்கர், கலெக்டர் கணேஷ், சிவகங்கை எம்.பி. செந்தில்நாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் தங்கமணி, நிருபர்களிடம் கூறியதாவது;-

தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயலினால் பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மின்சார வாரியத்திற்கு மிக அதிகளவு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை நடந்த கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 84 ஆயிரத்து 836 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. 4,230 கிலோ மீட்டர் தூரம் உயர்மின் பாதையும், 841 மின்மாற்றிகளும், 201 துணை மின் நிலையங்களும் சேதமடைந்துள்ளன. புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இன்று மாலையே மின்சாரம் வழங்கப்படும். இதேபோல் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 50 சதவீதத்திற்கு அதிகமாக மின் இணைப்பு வழங்கப்பட்டதுடன், அந்த மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை கஜா புயலினால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் மின் பழுதுகளை சரிசெய்யும் வகையில் ஆந்திராவில் இருந்து 1000 பணியாளர்கள் நாளை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வர உள்ளனர். இதேபோல் பிற மாவட்டங்களில் இருந்தும் பணிகள் முடித்த 1000 பணியாளர்கள் வர உள்ளனர். இதன்மூலம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 2000 பணியாளர்கள் கூடுதலாக வர உள்ளனர். இதன்மூலம் நகரப் பகுதி மற்றும் கிராமப் பகுதிகளுக்கு படிப்படியாக மின்இணைப்பு வழங்கப்படும்.

கிராமப் பகுதிகளில் அதிகளவு மரங்கள் சாய்ந்துள்ளதால் மரங்களை அப்புறப்படுத்திய பின்னரே பணிகள் மேற்கொள்ள முடிகிறது. இங்கு கிட்டத்தட்ட 20 உயர்மின் கோபுரங்கள் உள்ளன. உயர்மின் கோபுரங்கள் முழுமையாக சரி செய்தால்தான் மின்சாரம் வழங்க முடியும். 201 துணைமின் நிலையங்களில் 56 துணை மின் நிலையங்கள் நன்றாக உள்ளது. இதுவரை 6 உயர்மின் கோபுரங்கள் சரிசெய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 14 உயர்மின் கோபுரங்கள் 3 நாட்களுக்குள் சரி செய்யப்படும். இதன்பின்னர் அனைத்து பகுதிகளுக்கும் போர்க்கால அடிப்படையில் மின் வினியோகம் வழங்கப்படும்.

இதற்கிடையே கிராமப் பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் ஜெனரேட்டர் மூலம் குடிநீர் தடையின்றி வழங்கப்படும். இப்பணிகளில் ஏதேனும் தடை ஏற்பட்டால் அதனையும் சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இயற்கை சீற்றத்தினால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தமிழக அரசு முழுவதுமாக உணர்ந்துள்ளது. பொதுமக்களும் மீட்புப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு போதிய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இதன்மூலம் பணிகள் மிக வேகமாக நடைபெறும். மின்சார வாரியத்திற்கு மட்டும் ரூ.1000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. கணக்கெடுக்கும் பணி முடிவடையவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story