கொட்டாம்பட்டியில் தொடரும் மின்தடையால் பொதுமக்கள் அவதி; சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு


கொட்டாம்பட்டியில் தொடரும் மின்தடையால் பொதுமக்கள் அவதி; சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 Nov 2018 9:30 PM GMT (Updated: 18 Nov 2018 8:23 PM GMT)

கொட்டாம்பட்டி பகுதியில் கஜா புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டதில் ஏராளமான மரங்கள் விழுந்ததில் கொட்டாம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 50–க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்தன.

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கஜா புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது ஏராளமான மரங்கள் விழுந்ததில் கொட்டாம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 3 டிரான்ஸ்பார்மர் உள்பட 50–க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் கொட்டாம்பட்டி பகுதியில் உள்ள கிராமங்கள் இருளில் மூழ்கின. மேலும் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் மதுரை மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து மறு சீரமைப்பு பணி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்தனர். அதன்படி மின்வாரிய ஊழியர்கள் சேதமடைந்த மின்கம்பம், கம்பிகளை சீரமைத்து வருகின்றனர். ஆனால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.

இந்தநிலையில் கொட்டாம்பட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தில் நேற்று 3–வது நாளாக மின்தடை தொடர்ந்ததால், மின்சாரம் இன்றி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. குடிநீர் தட்டுப்பாட்டால் அவதியடைந்த அப்பகுதி பொதுமக்கள் திடீரென்று நேற்று மின்கம்பங்களை விரைந்து சீரமைத்து மின்சாரம் வழங்க கோரி காரைக்குடி–திண்டுக்கல் சாலையில் மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த மின்வாரிய அதிகாரிகள் மற்றும் கொட்டாம்பட்டி போலீசார் மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மின்கம்பங்கள் விரைந்து சீரமைக்கப்படும் என்று தெரிவித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story