பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை
பட்டாசு ஆலைகளை திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தாயில்பட்டி,
சமத்துவ மக்கள் கட்சியின் மத்திய மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிவகாசியில் உள்ள கட்சி அலுவலகத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வேல்பாண்டி தலைமையில் நடந்தது. இளைஞர் அணி செயலாளர் வைரபிரகாசம், துணை செயலாளர் தங்க மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாநில துணை பொதுச்செயலாளர் சுந்தர் விவசாய அணி செயலாளர் சந்துரு, மாணவரணி செயலாளர் முனீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டார்.
லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவிப்பதால் பட்டாசு ஆலை பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கண்டு ஆலைகளை திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் திருத்தங்கல் புதிய பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், சிவகாசி பஸ் நிலைய விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், சிவகாசி–சாத்தூர் சாலையை சீரமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. முடிவில் கலை இலக்கிய அணி செயலாளர் பரமசிவம் நன்றி கூறினார்.