சுனாமியை மிஞ்சிய ‘கஜா’ புயல் அதிராம்பட்டினம் மீனவர்கள் கண்ணீர்


சுனாமியை மிஞ்சிய ‘கஜா’ புயல் அதிராம்பட்டினம் மீனவர்கள் கண்ணீர்
x
தினத்தந்தி 19 Nov 2018 4:15 AM IST (Updated: 19 Nov 2018 2:30 AM IST)
t-max-icont-min-icon

‘கஜா’ புயல் சுனாமியை மிஞ்சி விட்டதாக அதிராம்பட்டினம் மீனவர்கள் கண்ணீருடன் கூறுகிறார்கள். அதிராம்பட்டினம் பகுதியில் வீடுகள் சேற்றின் கூடாரமாக காட்சி அளிக்கின்றன. நிவாரண முகாம்களில் கிராம மக்கள் தவித்து வருகிறார்கள்.

தஞ்சாவூர்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ‘கஜா’ புயல் கரையை கடந்தது. ஆனால் புயலின் தீவிர வேகத்தில் சிக்கிய பகுதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள அதிராம்பட்டினம் ஆகும். புயல் கரையை கடந்து சென்று கொண்டிருந்த வேளையில் அதிராம்பட்டினத்தில் 111 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று பல மணி நேரம் வீசியது.

கடல் அலை 10 மீட்டர் உயரத்துக்கு எழும்பி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. தற்போது கடல் நீர் வடிந்தபோதும் வீடுகள் முழுவதும் சேறு நிறைந்து காணப்படுகிறது. இதனால் அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவ கிராம மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.

அதிராம்பட்டினம் பகுதியில் கரையூர்தெரு, காந்திநகர், ஆறுமுககிட்டங்கிதெரு, ஏரிபுறக்கரை, தரகர்தெரு உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடற்கரையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் தூக்கி வீசப்பட்டு சேதம் அடைந்துள்ளன.

இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:-

அதிராம்பட்டினம் பகுதியில் கடற்கரையில் இருந்து 2½ கிலோ மீட்டர் தொலைவில் தான் குடியிருப்புகள் உள்ளன. ஆனால் புயல் காற்று 111 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியதால் கடல் அலை 10 மீட்டர் உயரத்துக்கு எழும்பி கடல் நீர் ஊருக்குள் புகுந்து விட்டது. சுனாமியின்போது கூட இவ்வளவு பாதிப்புகள் இல்லை. கஜா புயல் சுனாமியை மிஞ்சி விட்டது. கடல் நீர் ஊருக்குள் வரும் என நினைத்து கூட பார்க்கவில்லை. ஆகையால் வீடுகளில் தூங்கினோம். சேதமடைந்த படகுகளை சரிசெய்து மீன்பிடி தொழிலில் மீண்டும் ஈடுபடுவதற்கு ஒரு ஆண்டு வரை ஆகலாம். எங்கள் வாழ்வாதாரம் அழிந்து விட்டது.

இவ்வாறு மீனவர்கள் கண்ணீருடன் கூறினர்.

அதிராம்பட்டினம் பகுதியில் நேற்று 4-வது நாளாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மீனவர்கள் ஆங்காங்கே கிடந்த படகுகளை மீட்கும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர். படகுகளின் என்ஜின்களை தூய்மைப்படுத்தும் பணியும் நடந்தது. அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் உள்ள ரெயில்வே கீழ்ப்பாலத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது.

வீடுகளில் தேங்கி கிடக்கும் சேறு காரணமாக குடியிருப்பு பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. அங்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மின்சாரம் மற்றும் குடிநீர் வினியோகம் சீராகாததால் பொதுமக்கள், புயல் நிவாரண முகாம்களில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதிராம்பட்டினம் கரையூர் தெரு, காந்திநகர் உள்ளிட்ட இடங்களில் கடல் முகத்துவாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. முகத்துவாரத்தின் கரை உடைந்து தரையும், முகத்துவாரமும் ஒரே போல காட்சி அளிக்கின்றன. இதனால் முகத்துவாரம் வழியாக கடலுக்கு படகுகளை எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதிகளில் மீன் இறங்குதளமும் கடும் சேதத்துக்கு உள்ளாகி உள்ளது. 

Next Story