போடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை கலெக்டர் பார்வையிட்டார்


போடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை கலெக்டர் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 19 Nov 2018 4:30 AM IST (Updated: 19 Nov 2018 2:31 AM IST)
t-max-icont-min-icon

போடியில் கொட்டக்குடி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கலெக்டர் பல்லவி பல்தேவ் நேரில் சென்று பார்வையிட்டார்.

போடி,

‘கஜா’ புயலின் காரணமாக போடி பகுதியில் பெய்த பலத்த மழையால் குரங்கணி, வடக்குமலை, ஊஞ்சல் ஆகிய ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இந்த ஆறுகள் கொட்டக்குடி ஆற்றில் இணைவதால் அதில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பிள்ளையார் தடுப்பணையில் மழைநீர் அருவி போல் கொட்டுகிறது.

போடி நகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் சம்பலாற்றில் உறை கிணறுகளில் உள்ள குழாய்களில் மண் அடைத்து கொண்டது. இதனால் நகர் பகுதியில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. குழாய் அடைப்பை சரி செய்யும் பணியில் நகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். போடியில் ‘கஜா’ புயலால் ஏற்பட்ட வெள்ள சேத பகுதிகளை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று காலை பார்வையிட்டார்.

போடி புதூர் வேட்டவராயன் கோவில் பாலம், அணைப்பிள்ளையார் தடுப்பணை, ராஜ வாய்க்காலில் உள்ள மதகுகள் ஆகியவற்றை பார்வையிட்டார். போடி தாலுகா அரசு மருத்துவமனைக்கு சென்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்று கேட்டறிந்தார். பின்னர் பத்திரகாளிபுரம், டொம்புசேரி, மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள கண்மாய்களில் ஆய்வு செய்தார். அவருடன் வருவாய்த்துறை அதிகாரிகள் உள்பட பலர் இருந்தனர்.


Next Story