அரசுப் பணியாளர்களுக்கு விளையாட்டு போட்டிகள் கரூரில் நாளை நடக்கிறது


அரசுப் பணியாளர்களுக்கு விளையாட்டு போட்டிகள் கரூரில் நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 19 Nov 2018 3:45 AM IST (Updated: 19 Nov 2018 2:46 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் அரசு பணியாளர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நாளை நடைபெற உள்ளன.

கரூர்,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கரூர் மாவட்ட பிரிவின் சார்பாக, அரசுப் பணியாளர்களுக்கான மாவட்ட அளவிலான தடகளம்-குழு விளையாட்டுப் போட்டிகள் தாந்தோன்றிமலை விளையாட்டரங்கில் நாளை (செவ்வாய்க் கிழமை) நடைபெற உள்ளது. இதில் 100, 200, 400, 800, 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய தடகள போட்டிகளில் ஆண்கள், பெண்களுக்கு தனிதனியாக நடத்தப்படுகின்றன. மேலும் கூடைப்பந்து, கபடி, கைப்பந்து, கால்பந்து ஆகிய குழு போட்டிகளும் இங்கு நடக்கின்றன. இறகுப்பந்து, டென்னிஸ் மற்றும் டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகள் கரூர் ஆபிசர்ஸ் கிளப் மைதானத்திலும் நடைபெற உள்ளன.

அரசுத் துறைகளில் பணிபுரியும் முழு நேர அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம். மின்சாரத்துறை, காவல்துறை, மற்றும் தீயணைப்புத் துறையில் பணியாற்றும் சீருடை பணியாளர்கள் பங்கு கொள்ள இயலாது. அரசு அலுவலகங்களில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்கள் பங்கு கொள்ள இயலாது. உடற்கல்வி துறையில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குநர்கள் பயிற்சியாளர்கள் பங்கு கொள்ளலாம். தடகளப் போட்டியில் ஒருவர் ஏதேனும் இரண்டு போட்டிகளில் மட்டுமே கலந்து கொள்ளலாம். ஒரு அலுவலகத்திலிருந்து எத்தனை நபர்கள் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்-வீராங்கனைகள் தங்கள் அலுவலகத்தில் பெறப்பட்ட அடையாள அட்டையை கொண்டு வருதல் வேண்டும். இதில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது.

போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகள் கரூர் மாவட்டத்தின் சார்பாக மாநிலப் போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். மாநில அளவிலான போட்டிகளுக்கு செல்லும் வீரர்-வீராங்கனைகளுக்கு கரூர் மாவட்டத்தின் சார்பாக விளையாட்டு சீருடைகள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story