‘கஜா’ புயலால் பயிர்களுக்கு ஏற்பட்ட சேத மதிப்பு எவ்வளவு? அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு


‘கஜா’ புயலால் பயிர்களுக்கு ஏற்பட்ட சேத மதிப்பு எவ்வளவு? அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 18 Nov 2018 11:00 PM GMT (Updated: 18 Nov 2018 9:27 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் ‘கஜா’ புயலால் பயிர்களுக்கு ஏற்பட்ட சேத மதிப்பு எவ்வளவு என்ற விவரத்தை 3 நாட்களில் அறிக்கையாக தயாரித்து தாக்கல் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டு உள்ளார்.

திருச்சி,

கஜா புயலின் கோர தாண்டவத்துக்கு தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சாரம், குடிநீர் வசதி இன்றி 2 நாட்களாக மக்கள் அவதிப்பட்டு வந்தனர். திருச்சி நகரை பொறுத்தவரை நேற்று தான் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.

ஆனால் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மணப்பாறை, மருங்காபுரி பகுதிகளில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. மணப்பாறை பகுதியில் மட்டும் ஆயிரக்கணக்கான மரங்கள் ஒரே நேரத்தில் சரிந்து விழுந்ததால் அவற்றை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால் மின் கம்பங்கள் விழுந்த இடங்களில் புதிய மின்கம்பங்களை நட்டு உடனடியாக மின் இணைப்பு வழங்க முடியாததால் இன்னும் பல கிராமங்கள் இருளில் தான் மூழ்கி கிடக்கின்றன. மின்சாரம் இல்லாததால் தங்களது அன்றாட அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகிறார்கள்.

திருச்சி மாவட்டம் லால்குடி, பச்சாம்பேட்டை, திருமணமேடு கிழக்கு, திருவளர்ச்சோலை, மண்ணச்சநல்லூர், கோபுரப்பட்டி ஆகிய இடங்களில் கஜா புயலை தாக்குப் பிடிக்க முடியாமல் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த வாழைகள் முறிந்து விழுந்தன. திருவளர்ச்சோலை உள்ளிட்ட இடங்களில் பொங்கலுக்கு அறுவடை செய்யும் நிலையில் இருந்த கரும்புகள் காற்றில் முறிந்து சேதம் அடைந்தன.

இந்நிலையில் வாழை மற்றும் கரும்பு பயிர்கள் சேதம் அடைந்த பகுதிகளை திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி நேற்று அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

திருச்சி மாவட்டத்தில் மருங்காபுரி, மணப்பாறை பகுதிகளில் ஏராளமான தென்னை மரங்களும், திருவெறும்பூர், லால்குடி, அந்தநல்லூர், மணிகண்டம், மண்ணச்சநல்லூர், தொட்டியம் பகுதியில் ஏராளமான வாழை மற்றும் கரும்பு பயிர்களும் கஜா புயலால் சேதம் அடைந்து உள்ளன. இதுவரை எடுக்கப்பட்டுள்ள கணக்குப்படி 1300 ஹெக்டேரில் வாழையும், 80 ஹெக்டேர் கரும்பும், 100 ஹெக்டேர் எலுமிச்சையும் சேதம் அடைந்திருப்பது தெரிய வந்து உள்ளது.

வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மாவட்டம் முழுவதும் பயிர் சேதம் பற்றிய கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகளை 22-ந்தேதிக்குள் முடித்து மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை தாக்கல் செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இறுதி அறிக்கை வந்த பின்னர் தான் சேத மதிப்பீடு பற்றிய முழு விவரமும் தெரியவரும். அந்த அறிக்கையை அரசுக்கு அனுப்பி இழப்பீடு தொகை கேட்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

இருளில் சிக்கி தவிக்கும் மணப்பாறை, மருங்காபுரி பகுதி மக்களுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. கூட்டு குடிநீர் திட்டத்திற்கு மின் வினியோகம் செய்யும் 24 துணை மின் நிலையங்களும் சீரமைக்கப்பட்டு மணப்பாறை பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story