மணப்பாறை பகுதியில் குடிநீர், மின்சாரம் கேட்டு 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்


மணப்பாறை பகுதியில் குடிநீர், மின்சாரம் கேட்டு 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 19 Nov 2018 4:15 AM IST (Updated: 19 Nov 2018 3:09 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை பகுதியில் குடிநீர் மற்றும் மின்சாரம் கேட்டு 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் அதிகாரிக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மணப்பாறை,

கஜா புயலால் திருச்சி மாவட்டத்தில் அதிக பாதிப்புக்குள்ளான பகுதி மணப்பாறைதான். இங்கு பல்வேறு இடங்களில் மின் கம்பங்களில் மரக்கிளை முறிந்து விழுந்ததிலும், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததாலும் கடந்த 3 நாட்களாக மின்சாரம் தடைபட்டுள்ளது. இதனால் குடிநீர் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இருப்பினும் ஒரு சில பகுதிகளில் ஜெனரேட்டர் மூலம் தொட்டிகளில் குடிநீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. தீராம்பட்டியில் பொதுமக்கள் குடி நீருக்காக காலிக்குடங்களுடன் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை மணப்பாறையை அடுத்த உசிலம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள புயல் சேதங்களை அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை. இதனால் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட ஏதும் வழங்கப்படாத நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். எனவே உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறி மணப்பாறை- கோவில்பட்டி சாலையில் உசிலை ஊரணி என்ற இடத்தில் மறியலில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மருததுரை, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்றபோது பொதுமக்களுக்கும், அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளாக மாறியது. இதனால் பொதுமக்கள் மரத்தை சாலையில் போட்டு தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக, அவர்கள் கூறியதை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.

இதேபோல் மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட ஏட்டுத்தெரு, வெங்கிடுசாமி தெரு, ராஜவீதி, கரிக்கான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மின்வினியோகம் இல்லாத நிலையில் குடிக்க குடிநீர் இல்லாமல் வேதனையில் உள்ளதாக கூறி கோவில்பட்டி சாலையில் ஏட்டுத்தெரு அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தங்கள் பகுதிக்கு உடனடியாக மின்வினியோகம் செய்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என்று கூறினர்.

இதையடுத்து அவர்களிடம் மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, மின்கம்பங்களை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் நிறைவடைந்த உடன் மின் வினியோகம் செய்யப்படும் என்று கூறினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story