தமிழக அரசு அறிக்கை அளித்தால் புயல் பாதிப்புக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு தயார் - எச்.ராஜா தகவல்


தமிழக அரசு அறிக்கை அளித்தால் புயல் பாதிப்புக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு தயார் - எச்.ராஜா தகவல்
x
தினத்தந்தி 18 Nov 2018 9:46 PM GMT (Updated: 18 Nov 2018 9:46 PM GMT)

தமிழக அரசு அறிக்கை அளித்தால் ‘கஜா’ புயல் பாதிப்புக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று எச்.ராஜா. தெரிவித்தார்.

திண்டுக்கல்,

‘இந்து சாம்ராஜ்ய சங்கமம்’ என்ற தலைப்பில் முகநூலில் நண்பர்களாக இருக்கும் இந்து உணர்வாளர்களின் சந்திப்பு கூட்டம் நேற்று திண்டுக்கல்லில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா திண்டுக்கல் வந்தார். வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளையொட்டி திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி அருகே உள்ள அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வ.உ.சிதம்பரனார் நாட்டுக்காக அனைத்தையும் அர்ப்பணித்தவர். தொழிலாளர்களுக்காக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கப்பல் விட்டவர். அவர் செய்த தியாகத்தில் ஒரு துளியாவது, நாம் நமது நாட்டுக்கு செய்ய வேண்டும். தற்போதைய 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகத்தை படித்து பார்த்தேன்.

ஆங்கிலேயர்கள் வெறும் 400 ஆண்டுகள் தான் நமது நாட்டை ஆட்சி செய்தனர். ஆனால், வெல்லெஸ்லி பிரபு உள்ளிட்ட ஆங்கிலேயர்கள் மற்றும் நமது நாட்டின் மீது படையெடுத்தவர்களின் வரலாறு தான் பாடப்புத்தகத்தில் அதிகமாக உள்ளது. 1,000 ஆண்டுகளுக்கு முன்பு கப்பல் படை நடத்திய ராஜேந்திர சோழன் உள்ளிட்டவர்களின் வரலாறுகள் அந்த அளவு இடம் பெறவில்லை. முதலில் வரலாற்று பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும்.

‘கஜா’ புயல் குறித்து மாநில பேரிடர் மேலாண்மை துறையினர் முன்னெச்சரிக்கை செய்ததால் உயிரிழப்புகள் குறைந்துள்ளது. மீட்பு நடவடிக்கையில் ஆர்.பி.உதய குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் தூங்காமல் பணி செய்ததாக தகவல் வந்தது.

‘கஜா’ புயலால் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தி மின்வினியோகத்தை சீரமைத்த அனைத்து அதிகாரிகளுக்கும், சிறப்பாக செயல்பட்ட மாநில அரசுக்கும் பா.ஜ.க. சார்பில் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.

புயல் பாதிப்பு குறித்து ஏற்கனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திரமோடி பேசி உள்ளார். எவ்வளவு பாதிப்பு என தமிழக அரசு அறிக்கை அளித்தால் நிவாரண தொகையை வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று அவர் கூறினார்.


Next Story