கடலூர் கூட்டுறவு வார விழாவில் 244 பயனாளிகளுக்கு ரூ.3 கோடி நலத்திட்ட உதவி - அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்


கடலூர் கூட்டுறவு வார விழாவில் 244 பயனாளிகளுக்கு ரூ.3 கோடி நலத்திட்ட உதவி - அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்
x
தினத்தந்தி 19 Nov 2018 5:00 AM IST (Updated: 19 Nov 2018 3:45 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் 244 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 8 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.

கடலூர்,

மாவட்ட கூட்டுறவுதுறை சார்பில் 65-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கடலூர் கூத்தப்பாக்கத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இளஞ்செல்வி வரவேற்றார். மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் கோமதி திட்ட விளக்க உரையாற்றினார்.

விழாவில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு 244 பனாளிகளுக்கு ரூ.3 கோடியே 8 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறந்த கூட்டுறவு சங்கங்கள், மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது:-

கூட்டுறவுதுறை விவசாயிகள், நெசவாளர்கள், மகளிர் சுயஉதவி குழுக்கள் என பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு சேவை ஆற்றி வரும் துறையாகும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் 2018-19-ம் ஆண்டு அக்டோபர் வரை 37 ஆயிரத்து 153 விவசாயிகளுக்கு ரூ.200 கோடியே 91 லட்சம் பயிர் கடன், 88 பேருக்கு ரூ.8 கோடியே 16 லட்சம் முதலீட்டு கடன், 56 ஆயிரத்து 473 பேருக்கு ரூ.210 கோடியே 85 லட்சம் நகைக்கடன், 220 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.6 கோடியே 5 லட்சம் கடன், 91 பேருக்கு ரூ.2 கோடியே 16 லட்சம் தானிய ஈட்டுக்கடன் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 2 ஆயிரத்து 576 பேருக்கு ரூ.5 கோடியே 61 லட்சம் சிறுவணிக கடன், 67 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.30 லட்சத்து 42 ஆயிரம் கடன், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு குறைந்த வட்டியில் ரூ.7 கோடியே 36 லட்சம் கடன், சிறுபான்மையினருக்கு 4 சதவீத வட்டியில் ரூ.37 லட்சத்து 50 ஆயிரம் கடன் வழங்கப்பட்டுள்ளது.

நகர கூட்டுறவு வங்கிகளில் தலா ரூ.2,500 வீதம் 19 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.47 ஆயிரம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 20 பேருக்கு ரூ.50 ஆயிரம், 20 பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் மூலதனமானியமாக தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் 10 ஆயிரத்து 887 கடன் பெற்ற விவசாயிகளிடம் இருந்து பயிர்காப்பீட்டு தவணை தொகையாக ரூ.87 லட்சத்து 90 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள் ளது. தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய கடலூர் மாவட்ட கிளையில் இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனத்துடன் இணைந்து ரூ.1 கோடியே 25 லட்சம் செலவில் புதிய பெட்ரோல் பங்க் அமைக்கும் பணி முடிவுறும் நிலையில் உள்ளது.

கூட்டுறவு சங்க தலைவர்கள் கடமை உணர்வோடு செயல்பட வேண்டும். விவசாயிகளுக்கு கடன் வழங்கி அவர்களின் வாழ்வாதாரம் உயர பாடுபட வேண்டும். அதேபோல் கொடுத்த கடனை வசூல் செய்யவும் வேண்டும். மாவட்ட கூட்டுறவுதுறை இந்த ஆண்டை விட அடுத்த ஆண்டு அதிக வளர்ச்சி பெற்றது என்ற பெருமையை நீங்கள் பெற்றுத்தர வேண்டும் என்று அவர் பேசினார்.

இதில் கூட்டுறவு சங்க துணை பதிவாளர்கள் ஜெகத்ரட்சகன், ஆறுமுகம், உதவி இயக்குனர்(கைத்தறித்துறை) திருஞானசம்பந்தம், மத்திய கூட்டுறவு வங்கி பொதுமேலாளர் ஜானகிராமன், நகரசபை முன்னாள் தலைவர் குமரன், முன்னாள் துணை தலைவர் சேவல்குமார், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், கூட்டுறவு ஒன்றிய முன்னாள் தலைவர் பெருமாள்ராஜா, மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் துணை பதிவாளர் வெங்கடாஜலபதி நன்றி கூறினார்.


Next Story