கள்ளக்காதலை கைவிட பெற்றோர் அறிவுரை - 2 வயது மகளை கொன்று பெண் தூக்குப்போட்டு தற்கொலை


கள்ளக்காதலை கைவிட பெற்றோர் அறிவுரை - 2 வயது மகளை கொன்று பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 19 Nov 2018 4:06 AM IST (Updated: 19 Nov 2018 4:06 AM IST)
t-max-icont-min-icon

2 வயது மகளை கொன்று பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மைசூரு,

எச்.டி.கோட்டை தாலுகாவில் கள்ளக்காதலை கைவிடக்கூறி பெற்றோர் அறிவுரை வழங்கியதால் மனமுடைந்த ஒரு பெண் தனது 2 வயது மகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா கொத்தேகாலா கிராமத்தைச் சேர்ந்தவர் நாகய்யா. இவருடைய மகள் ராஜேஸ்வரி(வயது 23). இவருக்கும், எச்.டி.கோட்டை தாலுகா குன்னிகேகாலா கிராமத்தைச் சேர்ந்த சோமண்ணா(28) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 மகள்கள். இதில் 2-வது மகளுக்கு 2 வயதுதான் ஆகிறது.

திருமணத்திற்கு பிறகு ராஜேஸ்வரி தனது கணவருடன் குன்னிகேகாலா கிராமத்தில் வசித்து வந்தார். சோமண்ணா கூலித்தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் ராஜேஸ்வரிக்கும், அதேப்பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இந்த நிலையில் இவர்களுடைய கள்ளக்காதல் விவகாரம் சோமண்ணாவுக்கு தெரியவந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். மேலும் கள்ளக்காதலை கைவிடும்படி கூறினார். ஆனால் ராஜேஸ்வரி, தனது கணவரின் பேச்சை கேட்கவில்லை. அவர் தொடர்ந்து தனது கள்ளக்காதலனுடன் உல்லாசம் அனுபவித்து வந்தார். இதனால் ராஜேஸ்வரிக்கும், அவருடைய கணவர் சோமண்ணாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ராஜேஸ்வரி தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு தன்னுடைய 2 வயது மகளுடன் பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். பின்னர் அவர் அங்கேயே தங்கி இருந்தார். இந்த சந்தர்ப்பங்களில் சோமண்ணா, தனது மனைவி ராஜேஸ்வரியை சந்தித்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர் தனது கணவருடன் செல்ல மறுத்துவிட்டார். மேலும் தனது கள்ளக்காதலனுடனான தொடர்பை தொடர்ந்து வந்தார். இதனால் ராஜேஸ்வரிக்கும், அவருடைய பெற்றோருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்றும் ராஜேஸ்வரியை அவருடைய பெற்றோர் கண்டித்தனர். கள்ளக்காதலை கைவிட்டு, கணவருடன் சேர்ந்து வாழுமாறு அறிவுரை வழங்கினர். ஆனால் ராஜேஸ்வரி அதற்கு மறுத்தார். மேலும் பெற்றோர் தனக்கு அறிவுரை வழங்கியதால் மனமுடைந்த ராஜேஸ்வரி, நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அவரும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி ராஜேஸ்வரியின் பெற்றோருக்கும், அவருடைய கணவருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த அவர்கள் விரைந்து வந்து ராஜேஸ்வரியின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். பின்னர் இதுபற்றி எச்.டி.கோட்டை புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து ராஜேஸ்வரி மற்றும் அவருடைய 2 வயது மகளின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களுடைய உடல்களை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story