பெலகாவி சுவர்ண சவுதாவுக்குள் கரும்பு லாரிகளுடன் விவசாயிகள் போராட்டம் - கதவு உடைப்பு; போலீசாருடன் வாக்குவாதம்


பெலகாவி சுவர்ண சவுதாவுக்குள் கரும்பு லாரிகளுடன் விவசாயிகள் போராட்டம் - கதவு உடைப்பு; போலீசாருடன் வாக்குவாதம்
x
தினத்தந்தி 19 Nov 2018 5:00 AM IST (Updated: 19 Nov 2018 5:04 AM IST)
t-max-icont-min-icon

சர்க்கரை ஆலைகள் நிலுவைத் தொகையை வழங்கக்கோரி விவசாயிகள் கரும்பு லாரிகளை பெலகாவி சுவர்ணசவுதாவுக்குள் ஓட்டிச்சென்று போராட்டம் நடத்தினர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த கரும்புகளுக்கு சர்க்கரை ஆலைகள் பணம் வழங்காமல் பாக்கிவைத்துள்ளன.

எனவே சர்க்கரை ஆலைகளிடம் இருந்து நிலுவைத்தொகையை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், கரும்புக்கு அரசு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த கரும்பு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதுபோல, பாகல்கோட்டை, விஜயாப்புராவிலும் கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதையடுத்து, 19-ந் தேதி (அதாவது இன்று) பெலகாவியில் உள்ள சுவர்ண சவுதாவில் கரும்பு விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவும், சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்களிடம் இருந்து நிலுவைத்தொைகயை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடு்ப்பதாகவும் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், இன்று(திங்கட்கிழமை) பெலகாவியில் கரும்பு விவசாயிகளுடன் நடைபெற இருந்த பேச்சு வார்த்தையை முதல்-மந்திரி குமாரசாமி திடீரென்று ரத்து செய்தார். அத்துடன் நாளை (செவ்வாய்க்கிழமை) பெங்களூருவில் கரும்பு விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று குமாரசாமி அறிவித்துள்ளார். இதனால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கரும்பு விவசாயிகள் ஆத்திரமடைந்தார்கள். மேலும் சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்களிடம் இருந்து நிலுவைத்தொகையை பெற்றுத்தர முதல்-மந்திரி குமாரசாமி தயங்குவதாகவும் விவசாயிகள் குற்றச்சாட்டு கூறினார்கள்.

இந்த நிலையில், பெலகாவி கலெக்டர் அலுவலகம் அருகே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கரும்பு விவசாயிகள் நேற்று காலையில் திடீரென்று சுவர்ண சவுதாவுக்கு (சட்டசபை கட்டிடம்) கரும்புகள் ஏற்றப்பட்ட லாரிகளுடன் புறப்பட்டு சென்றார்கள். சுவர்ண சவுதா முன்பாக வைத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், விவசாயிகளை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது லாரிகளில் இருந்து இறங்கிய விவசாயிகள், சுவர்ண சவுதாவின் முன்பக்க கதவை கற்களால் தாக்கி உடைத்தார்கள். மேலும் அங்கிருந்த போலீஸ்காரரிடம் முன்பக்க கதவின் சாவியை கொடுக்கும்படி கேட்டு விவசாயிகள் மிரட்டினார்கள். இதனால் அவரும் விவசாயிகளிடம் சாவியை கொடுத்தார்.

பின்னர் சுவர்ண சவுதாவின் முன்பக்க கதவை திறந்து கொண்டு 4 கரும்பு லாரிகளுடன் விவசாயிகள் சுவர்ண சவுதாவுக்குள் நுழைந்தார்கள். அங்கு வைத்து சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்களுக்கு எதிராகவும், முதல்-மந்திரி குமாரசாமிக்கு எதிராகவும் விவசாயிகள் கோஷமிட்டார்கள். மேலும் முதல்-மந்திரி குமாரசாமி பெலகாவிக்கு வந்து கரும்பு விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும், எக்காரணத்தை கொண்டும் பெங்களூருவில் பேச்சு வார்த்தை நடத்தக்கூடாது, குமாரசாமி கொடுத்த வாக்கை மீறி விட்டார் என்று விவசாயிகள் ஆக்ரோஷமாக கோஷமிட்டார்கள். இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர்.

முன்னதாக விவசாயிகள் சுவர்ண சவுதாவுக்கு வருவது பற்றி தெரியாததால், அங்கு குறைந்த அளவே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். ஆனால் விவசாயிகள் கரும்பு லாரிகளுடன் சுவர்ண சவுதாவுக்கு நுழைந்ததை தொடர்ந்து போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்தார்கள். பெலகாவி போலீஸ் கமிஷனர் ராஜப்பாவும் அங்கு விரைந்து வந்தார். பின்னர் சுவர்ண சவுதாவுக்குள் லாரிகளுடன் புகுந்த விவசாயிகளை வெளியே செல்லும்படி போலீசார் கூறினார்கள். ஆனால் சுவர்ண சவுதாவின் வளாகத்தில் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் குண்டு கட்டாக சுவர்ண சவுதாவுக்குள் இருந்து வெளியே தூக்கி வந்தனர். இதனால் போலீசார், விவசாயிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 3 போலீசார், 2 விவசாயிகள் காயம் அடைந்தார்கள்.

அதே நேரத்தில் சுவர்ண சவுதாவுக்குள் நுழைந்த 4 லாரிகளும் வெளியே கொண்டு வரப்பட்டன. இதுதவிர சுவர்ண சவுதா முன்பு கரும்புகளுடன் ஏராளமான லாரிகள் அணிவகுத்து நின்றன. அந்த லாரிகளும் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டன. இதையடுத்து, சுவர்ண சவுதா முன்பு பழைய நிலை திரும்பியது. இதற்கிடையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போராட்டத்தில் ஈடுபட்ட 15-க்கும் மேற்பட்ட விவசாயிகளை பிடித்து சென்று விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பெலகாவி போலீஸ் கமிஷனர் ராஜப்பா கூறினார். ஆனால் 15-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் மீது போலீசார் வழக்குகள் பதிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதவிர பெலகாவி மாவட்டம் அதானியில் சர்க்கரை ஆலைகளிடம் இருந்து நிலுவைத்தொகையை பெற்று கொடுக்க வலியுறுத்தியும், முதல்-மந்திரி குமாரசாமி கரும்பு விவசாயிகளுடன் பெலகாவியிலேயே பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று கோரியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது அவர்கள், சாலையில் உருண்டும், அரை நிர்வாணமாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் விவசாயிகளிடம் போலீசார் சமாதானமாக பேசி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பெலகாவி தவிர பாகல்கோட்டை மாவட்டம் முதோலிலும் நேற்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதோல் டவுனில் காங்கிரஸ், பா.ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களின் படங்களை விவசாயிகள் தீவைத்து எரித்தனர். அத்துடன் கரும்புகளுடன் இருந்த டிராக்டர்களை நடுரோட்டில் தள்ளியும், சில டிராக்டர்களுக்கு தீவைத்தும் விவசாயிகள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். போலீசார் உடனடியாக டிராக்டர்களில் எரிந்த தீயை அணைத்தார்கள். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவம் கர்நாடகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண் விவசாயி கைது

பெலகாவி சுவர்ண சவுதாவுக்குள் கரும்பு லாரிகளுடன் புகுந்து நேற்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பெண் விவசாயியான ஜெயஸ்ரீ என்பவரும் கலந்து கொண்டார். அவர், முதல்-மந்திரி குமாரசாமி, பெலகாவி மாவட்ட பொறுப்பு மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியை அவதூறாக பேசினார். மேலும் சுவர்ணசவுதாவின் முன்பக்க கதவின் பூட்டை கல்லால் தாக்கி உடைக்கவும் செய்தார். இதையடுத்து, ஜெயஸ்ரீயை போலீசார் கைது செய்தார்கள்.

இதற்கிடையில், அந்த பெண் விவசாயி அல்ல, அரசுக்கு எதிராக, வேண்டுமென்றே போராட்டத்தில் ஈடுபடுகிறார், 4 ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபடாமல் எங்கு சென்றிருந்தார் என்று முதல்- மந்திரி குமாரசாமி கூறினார்.




Next Story