திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா 6-ம் நாள்: பக்தர்கள் வெள்ளத்தில் 63 நாயன்மார்கள் வீதி உலா மாணவர்கள் தோளில் சுமந்து வலம் வந்தனர்


திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா 6-ம் நாள்: பக்தர்கள் வெள்ளத்தில் 63 நாயன்மார்கள் வீதி உலா மாணவர்கள் தோளில் சுமந்து வலம் வந்தனர்
x
தினத்தந்தி 20 Nov 2018 4:15 AM IST (Updated: 19 Nov 2018 10:50 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவில் நேற்று பக்தர்கள் வெள்ளத்தில் 63 நாயன்மார்கள் வீதிஉலா நடந்தது. மாணவர்கள் நாயன்மார்களை தோளில் சுமந்து வலம் வந்தனர்.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 14-ந் தேதி முதல் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் விழாவின் 5-ம் நாளையொட்டி இரவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், அருணாசலேஸ்வரர், உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் பல்வேறு வாகனங்களில் கோவில் மாடவீதிகளை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இந்த நிலையில் கார்த்திகை தீபத் திருவிழா முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. அதன்படி 6-ம் நாளான நேற்று காலை 11 மணி அளவில் விநாயகர் மர யானை வாகனத்திலும், சந்திரசேகரர் வெள்ளி யானை வாகனத்திலும் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதன்பின் முக்கிய நிகழ்ச்சியாக 63 நாயன்மார்கள் வீதி உலா நடந்தது. இதனையொட்டி நாயன்மார்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வீதிஉலாவுக்கு தயாராக வைக்கப்பட்டிருந்தது. பள்ளி மாணவர்கள் காலையிலேயே கோவிலுக்கு வந்திருந்தனர். இந்த நிலையில் வீதிஉலா தொடங்கியது.

முதலில் திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் முன்னே செல்ல தொடர்ந்து மற்ற நாயன்மார்களை மாணவர்கள் தங்கள் தோள்களில் சுமந்து மாடவீதியை சுற்றி வந்தனர். வீதிஉலாவின்போது மாடவீதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று பரவசம் அடைந்து சாமி தரிசனம் செய்தனர்.

அதைத் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க மர யானை வாகனத்தில் விநாயகரும், அதன் பின்னே வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இரவு 10 மணி அளவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், அருணாசலேஸ்வரர், உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் வெள்ளி தேர், வெள்ளி இந்திர விமானம், வெள்ளி விமானங்களில் கோவில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. காலை 6 மணிக்கு மேல் தேரோட்டம் தொடங்குகிறது. முதலில் விநாயகர் தேரும், அதைத் தொடர்ந்து முருகர் தேரும் வீதி உலா செல்கிறது. 2 தேர்களும் நிலைக்கு வந்ததும் பெரியதேர் (சாமி தேர்) இழுக்கப்படும். இதில் ஆண்கள் ஒரு பக்கமும், பெண்கள் ஒரு பக்கமும் வடம் பிடித்து தேர் இழுப்பார்கள்.

பெரியதேர் நிலைக்கு வந்ததும் இரவில் அம்மன் தேரோட்டம் நடக்கும். அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள். இந்த தேரின் பின்னால் சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும். காலை முதல் இரவு வரை தேரோட்டம் நடைபெறும்.

Next Story