புயலால் பாதிக்கப்பட்ட மக்களை முதல்-அமைச்சர் சந்திக்காதது கண்டிக்கத்தக்கது தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் பேட்டி


புயலால் பாதிக்கப்பட்ட மக்களை முதல்-அமைச்சர் சந்திக்காதது கண்டிக்கத்தக்கது தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் பேட்டி
x
தினத்தந்தி 20 Nov 2018 3:45 AM IST (Updated: 19 Nov 2018 11:34 PM IST)
t-max-icont-min-icon

புயலால் பாதிக்கப்பட்ட மக்களை முதல்-அமைச்சர் சந்திக்காதது கண்டிக்கத்தக்கது என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்க வந்த கட்சியின் பொருளாளர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயலால் 7 மாவட்டங்களில் பெரிய அளவில் ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக நேரில் சந்தித்து இருக்க வேண்டும். தற்போது அமைச்சர்கள் சென்று சந்தித்து உள்ளனர். அமைச்சர்கள் செல்லும் இடங்களில் மக்கள் போராட்டம் நடத்துகின்றனர் என்றால், மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள் என அர்த்தம்.

3 நாட்களாக உணவு, மின்சாரம், தண்ணீர் உள்ளிட்டவை கிடைக்காமல், பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மத்தியில் கூட்டமாக செல்லும் போது கோபம் வரும். அதுவே ஆளும் கட்சி சென்றால் இன்னும் அதிகமாக மக்களுக்கு கோபம் வரும். இதனை பொறுத்து கொண்டு பதில் தெரிவித்து மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்பது தான் ஆட்சியின் கடமையாக இருக்க வேண்டும்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, கொடைக்கானல் மலர் கண்காட்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, ராமநாதபுரத்தில் கலவரம் ஏற்பட்டது. அவர் உடனடியாக ராமநாதபுரம் சென்றார். அது ஒரு உணர்வு தான். முதல்-அமைச்சராக இருக்கிறவர்கள், வருகிறார்களா, செல்கின்றனரா என்பது முக்கியமல்ல.

முதலில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல வேண்டும் என்கிற உணர்வு இருக்க வேண்டும். அந்த உணர்வு இருந்தால் வேலைகளை காரணம் காட்டி போகாமல் இருக்க முடியாது. வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு செல்லலாம். ஆனால், இங்குள்ள அமைச்சர்களுக்கு அந்த உணர்வு என்பது கிடையாது. ஆகவே முதல்-அமைச்சர் அங்கு செல்லாதது வருத்தத்திற்குரியது, மிகவும் கண்டிக்கதக்க செயல்.

இவர்களுக்கு என்னவென்றால் நாம் என்னதான் செய்தாலும் மீண்டும் ஆட்சிக்கு வரப் போவதில்லை. அதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று என்ன பயன்? என முடிவு செய்திருக்கின்றனர், என எண்ணுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story