தேங்காய் எண்ணெயை கொள்ளையடிக்க லாரியை எரித்து நாடகமாடியதாக 4 பேரிடம் போலீசார் விசாரணை
தொப்பூர் அருகே லாரி தீ விபத்து நடந்ததில் தேங்காய் எண்ணெயை கொள்ளையடித்து நாடகமாடியதாக 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நல்லம்பள்ளி,
கடந்த அக்டோபர் மாதம் 21-ந் தேதி கோவையில் இருந்து ரூ.40 லட்சம் மதிப்புள்ள தேங்காய் எண்ணெய் லோடு ஏற்றிக்கொண்டு ஆந்திராவிற்கு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள பப்பிரெட்டியூரை சேர்ந்த டிரைவர் சங்கரன் (வயது 30) என்பவர் ஓட்டி வந்தார். மாற்று டிரைவராக சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள மாதநாயக்கன்பட்டியை சேர்ந்த விஜயகுமார் (28) என்பவர் உடனிருந்தார்.
இவர்கள் சென்ற லாரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே வந்த போது திடீரென டயர் வெடித்ததாகவும், அப்போது லாரியில் திடீரென தீப்பிடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சங்கரனும், விஜயகுமாரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அப்போது, பெங்களூருவை நோக்கி வந்துகொண்டிருந்த இரண்டு கார்கள் மற்றும் ஒரு கியாஸ் டேங்கர் லாரி எரிந்துகொண்டிருந்த எண்ணெய் லாரி மீது மோதியது. இதில் அந்த வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் தேங்காய் எண்ணெயை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் லாரியை எரித்து நாடகமாடியது தெரியவந்தது. லாரியை மேச்சேரி அருகே நிறுத்தி விட்டு அதில் இருந்து 75 சதவீத எண்ணெய்களை மாற்று லாரியில் கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரிகிறது. மீதி எண்ணெயுடன் தொப்பூர் அருகே லாரியை தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து லாரி டிரைவர் சங்கரன், விஜய குமார், மாற்று லாரி டிரைவர் சேகர் (29), லாரியின் உரிமையாளர் பிரபு (30) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story