மாவட்டக்கல்வி அலுவலர் பொறுப்பில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்


மாவட்டக்கல்வி அலுவலர் பொறுப்பில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 Nov 2018 4:15 AM IST (Updated: 20 Nov 2018 12:13 AM IST)
t-max-icont-min-icon

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை மட்டுமே பொறுப்பு மாவட்டக்கல்வி அலுவலர்களாக தமிழக அரசு நியமிக்க வேண்டும் என சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாமக்கல்,

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு மாநிலத்தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாநில அமைப்புச் செயலாளர் உதயக்குமார் வரவேற்று பேசினார். கூட்டத்தில், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடமும், மாவட்ட கல்வி அலுவலர் பணியிடமும் ஒத்த பணியிடமாக உள்ளதால், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் பணிப்பதிவேடு, பராமரிப்பு, ஓய்வூதிய பலன்கள், வருங்கால வைப்பு நிதி மற்றும் விடுப்பு அதிகாரம் போன்ற அனைத்து பணிகளும் முதன்மை கல்வி அலுவலரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் தொடர்ந்து நடைபெற வேண்டும்.

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை மட்டுமே பொறுப்பு மாவட்டக்கல்வி அலுவலர்களாக தமிழக அரசு நியமிக்க வேண்டும். காலியாக உள்ள மாவட்டக்கல்வி அலுவலர் பணியிடங்களை பணிமூப்பு பட்டியல் படி உடனடியாக நிரப்பவேண்டும். பணியில் மூத்த மேல்நிலைப்பள்ளி தலை மை ஆசிரியர்களை மட்டுமே முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்களாக நியமிக்க வேண்டும்.

500 பள்ளிகளுக்கு ஒரு கல்வி மாவட்டம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 1,650 பள்ளிகள் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் 2 கல்வி மாவட்டங்கள் மட்டுமே உள்ளன. இங்கு ராசிபுரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய கல்வி மாவட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா பள்ளிகளின் முதல்வர்களுக்கு இணையான ஊதியத்தை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் சார்ந்த விவரங்களை தமிழக கல்வித்துறைக்கும், பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கும் உடனுக்குடன் தெரிவிக்க ஏதுவாக, ஒவ்வொரு அரசு மேல்நிலைப்பள்ளிக்கும் கணினி பயிற்சி பெற்ற நலத்திட்ட அலுவலரை நியமிக்க வேண்டும்.

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அரசு தேர்வு பணிகளுக்கான உழைப்பு ஊதியம் நாள்ஒன்றுக்கு ரூ.750 வழங்க வேண்டும். தமிழக அரசின் 6-வது ஊதியக்குழு காலத்தில் இருந்து உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், தாசில்தார்களுக்கு வழங்கப்பட்டு வந்த தனி ஊதியம் தற்போது ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதுபோல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கோரிக்கையினை ஏற்று மறுக்கப்பட்ட தனி ஊதியத்தை ரூ.2,500 ஆக நிர்ணயித்து வழங்க உரிய உத்தரவினை பிறப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாநில பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் கணேசன், பிரசார செயலாளர் பிரேம்குமார், தலைமையிட செயலாளர் ராஜாகென்னடி, செய்தி தொடர்பு செயலாளர் முருகேசன், மாநில துணை தலைவர்கள் ராஜா, செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாநில இணை செயலாளர் ராஜா ஜெகஜீவன் நன்றி கூறினார்.

Next Story