புயலால் பாதித்த பகுதிகளை அதிகாரிகள் பார்வையிடாததை கண்டித்து தஞ்சை, நாகை மாவட்டங்களில் 59 இடங்களில் மறியல்


புயலால் பாதித்த பகுதிகளை அதிகாரிகள் பார்வையிடாததை கண்டித்து தஞ்சை, நாகை மாவட்டங்களில் 59 இடங்களில் மறியல்
x
தினத்தந்தி 19 Nov 2018 11:00 PM GMT (Updated: 19 Nov 2018 6:48 PM GMT)

புயலால் பாதித்த பகுதிகளை அதிகாரிகள் பார்வையிடாததை கண்டித்து தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங் களில் 59 இடங்களில் நேற்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

கஜா புயல் தாக்கத்தால் தஞ்சை மாவட்டத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்இணைப்புகள் அடியோடு பாதிக்கப்பட்டன. மின்வசதி, குடிநீர் வசதி இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கிராமங் களில் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து கணக்கெடுக்க அதிகாரிகள் வராததால் மக்கள் ஆத்திரம் அடைந்தனர்.

மேலும் குடிநீர் வசதி, மின்வசதியை ஏற்படுத்தி கொடுக்காததாலும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மின்வசதியை விரைவாக ஏற்படுத்தி தரக்கோரி தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி.காலனி அருகே ராஜாஜிநகரில் உள்ள தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை தமிழ்த்தாய் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தியாகி செல்லத்துரை நகர், கஜலட்சுமிநகர், காமராஜ்நகர், எஸ்.ஏ.எஸ்.நகர், தேவர்நகர், கல்யாணசுந்தரம் நகர், சகாயம் நகர், பூக்கொல்லை ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் தஞ்சை கருணாவதிநகர் வளைவு அருகே செந்தமிழ்நகர், அஜிஸ்நகர், ஜமால்உசேன் நகரை சேர்ந்த மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் குழுவினர் நேரில் ஆய்வு செய்து உரிய நிவாரண பணிகளை மேற்கொள்ளவில்லை எனவும், குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை எனவும் கூறி தஞ்சை மாவட்டம் கண்ணுக் குடி நால்ரோடு, வெட்டிக் காடு, பாப்பாநாடு, மேல உளூர், மூணுமாங்கொல்லை புதுவிடுதி, ஊரணிபுரத்தில் 3 இடங்களில் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டத்தின்போது மரக்கிளைகளை சாலையின் குறுக்கே போட்டிருந்தனர். மூணுமாங்கொல்லைபுதுவிடுதி மற்றும் ஊரணிபுரம் ஆகிய ஊர்களில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் சாலையின் நடுவே அடுப்பு அமைத்து அங்கு சமையல் செய்தனர்.

பட்டுக்கோட்டை ஆலடிக்குமுளை பஸ் நிறுத்தம் அருகே பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் கொட்டு மழையையும் பொருட்படுத்தாமல் மறியலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தினால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

கஜா புயலால் கீழே சாய்ந்த தென்னை மரங்கள் குறித்து முறையாக கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும். குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்சிற்றம்பலம் கடைவீதியில் 15-க்கும் மேற்பட்ட கிராமமக்கள், மரக்கிளைகள், தகரத்தை சாலையில் போட்டு கொட்டு மழையிலும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் 3½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் கோவிலூர், பாளையம், பட்டுக்கோட்டை மேலத்தெரு, ஆதனூர் ஆகிய பகுதிகளிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், உத்தரங்குடி, அடியக்கமங்கலம், தப்பளாம்புலியூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கோட்டூர், மேலப்பாளையம், மணலி, வேலூர், கொக்கலாடி, நெடும்பலம், அண்ணாநகர், தோப்படிதெரு, பள்ளிவாசல்தெரு, திருத்துறைப்பூண்டி பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ரொக்ககுத்தகை உள்ளிட்ட 31 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

நாகை மாவட்டத்தில் தாணிக்கோட்டகம், ஓடாச்சேரி, பொரவாச்சேரி, பையூர், தகட்டூர், கைணாகுளம், துளசியாபட்டினம், கொடியாளத்தூர், தென்மருதூர், நாலுவேதபதி, திருக்குவளை, மருதூர் ஆகிய 12 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது.

நேற்று ஒரு நாளில் மட்டும் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 59 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது.

Next Story