திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு: போலீஸ்காரரின் மனைவி, தாயுடன் தீக்குளிக்க முயற்சி


திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு: போலீஸ்காரரின் மனைவி, தாயுடன் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 19 Nov 2018 10:00 PM GMT (Updated: 19 Nov 2018 6:50 PM GMT)

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில், போலீஸ்காரரின் மனைவி, தாயுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக நேற்று ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். அப்போது, அலுவலக வளாகத்தில் வந்த ஒரு பெண் தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை தன் மீதும் அருகில் நின்ற மற்றொரு பெண் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே ஓடி வந்த போலீசார் மண்எண்ணெய் கேனை பறித்ததுடன் தண்ணீரை அவர்களின் மேல் ஊற்றினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் திண்டுக்கல் அருகே உள்ள பாளையங்கோட்டை பிரவனம்பட்டியை சேர்ந்த சாந்தி (வயது 35), அவருடைய தாய் பாக்கியலட்சுமி (62) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசாரிடம் சாந்தி கூறும்போது, எனது கணவர் செல்லப்பாண்டி தேனி மாவட்டம் போடியில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். நாங்கள் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறோம். பிரவனம்பட்டியில் உள்ள எனக்கு சொந்தமான 1½ ஏக்கர் நிலத்தை பழனிசாமி என்பவர் ஆக்கிரமித்துள்ளார். அங்கு சென்றால் அவர் எங்களை மிரட்டுகிறார். எனவே, தற்கொலைக்கு முயன்றோம், என்றார். இதுதொடர்பாக கலெக்டரை சந்தித்து மனு அளிக்குமாறு போலீசார் அனுப்பி வைத்தனர். அதன்பேரில் அவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Next Story