“கஜா” புயலின் கோர தாண்டவத்தால் டெல்டா பகுதியில் கடும் பொருளாதார அழிவை சந்தித்துள்ள கிராமங்கள்


“கஜா” புயலின் கோர தாண்டவத்தால் டெல்டா பகுதியில் கடும் பொருளாதார அழிவை சந்தித்துள்ள கிராமங்கள்
x
தினத்தந்தி 19 Nov 2018 10:45 PM GMT (Updated: 19 Nov 2018 7:06 PM GMT)

கஜா புயலின் கோர தாண்டவத்தால் டெல்டா பகுதியில் கடும் பொருளாதார அழிவை கிராமங்கள் சந்தித்துள்ளன. மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும் அவதிப்படுகிறார்கள்.

தஞ்சாவூர்,

கஜா புயலினால் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நாகை மாவட்டத்தில் நாகையில் தொடங்கி வேதாரண்யம் வரை அனைத்து கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. குடிசை வீடுகள் தரைமட்டமாகி உள்ளன. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் வீடுகளை சுற்றிலும் இருந்த தென்னை, மா, பனை, புளிய மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. மீனவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மீனவர்களின் படகுகள், வலைகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. விளைநிலங்களில் கடல்நீர் புகுந்ததால் விளைநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு படகுகளின் மதிப்பும் லட்சக்கணக்கான ரூபாய் ஆகும்.

50 ஆண்டுகளாக வளர்த்து வந்த தென்னை, மா, புளிய மரங்கள் போன்றவற்றையும் இழந்துள்ளதால் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிராமங்களிலும் வசிக்கும் மக்கள் இந்த புயலினால் கடும் பொருளாதார அழிவை சந்தித்துள்ளனர். இதனால் மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கதியாய் உள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்திலும் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சுற்றிலும் உள்ள அனைத்து கிராமங்களும் கஜா புயலினால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி வரையிலான அனைத்து கிராமங்களும் கஜா புயலுக்கு கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களும் புயலினால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.இன்னும் பல கிராமங்களில் வீடுகளின் மீது விழுந்த மரங்கள், மின்கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளன. ஏராளமான குடிசை வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. பல கிராமங்களுக்கு செல்வதற்கு கூட வசதி இல்லாத வகையில் மரங்கள் சாலையில் விழுந்து கிடக்கின்றன. பல இடங்களில் கிராம மக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் அப்புறப்படுத்தி வருகின்றன. ஒவ்வொரு கிராமங்களிலும் மக்கள் வீடுகள், தென்னை மரங்கள், வாழை மரங்கள் போன்றவற்றை இழந்து கடுமையான பொருளாதார இழப்பை சந்தித்துள்ளனர்.பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட வரவில்லை என்றும், உணவு, குடிநீர் கிடைக்கவில்லை என்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். பல கிராமங்களில் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் கிடைக்கவில்லை. இன்னும் மக்கள் நிவாரண முகாம்களில் உள்ளனர். அவர்களும் தங்களை அதிகாரிகள் வந்து பார்க்கவில்லை என்ற ஆதங்கத்தில் உள்ளனர். பல கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் முடங்கிக்கிடக்கின்றன.

தஞ்சை மாவட்டமும் கஜா புயலுக்கு கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. தஞ்சை மாநகரிலும் பல்வேறு இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது. இது தவிர தஞ்சையை அடுத்த சூரக்கோட்டையில் இருந்து ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம், திருச்சிற்றம்பலம், மல்லிப்பட்டினம், திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, பாபநாசம், கும்பகோணம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த கிராமங்களிலும் ஏராளமான வீடுகள், மரங்கள், மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை மரங்களும் அடியோடு சாய்ந்தும், முறிந்தும் விழுந்துள்ளன. ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பாச்சூர், பழங்சூர், வேப்பங்காடு, சேதுபாவாசத்திரம், குருவிக்கரம்பை, வாத்தலைக்காடு, பூக்கொல்லை, பேராவூரணி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தென்னை, வாழை, பலா, மா உள்ளிட்ட மரங்கள் அடியோடு அழிந்து விட்டன. பல இடங்களில் விவசாயிகளின் தென்னந்தோப்பு, வாழைத்தோப்பு முற்றிலும் அடியோடு அழிந்துவிட்டன.

இந்த கஜா புயலுக்கு டெல்டா மாவட்ட மக்கள் கடும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளனர். மேலும் கிராம பகுதிகளில் மின்சாரம் இல்லாததால் குடிநீர் இன்றியும் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்கள் கூட பல கிராமங்களில் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கடந்த 5 நாட்களாக மின்சார வசதி இல்லாததால் மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கும் ஆளாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள் சார்பிலும் நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த புயலுக்கு ஒவ்வொரு கிராமங்களும் கடுமையான பொருளாதார அழிவை சந்தித்துள்ளன. கிராமங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் முடங்கி கிடக்கின்றன. இந்த பேரழிவில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும். எனவே இந்த கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

Next Story