குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலிக்குடங்களுடன் திரண்டு வந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலிக் குடங்களுடன் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த பொதுமக்கள், குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் மனு கொடுத்தனர்.
நாமக்கல்,
நாமக்கல் அருகே உள்ள முத்துகாப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்கோம்பை தொட்டிய தெருவை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு காலிக்குடங்களுடன் வந்து, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-
புதுக்கோம்பை தொட்டிய தெருவில் 35 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காவிரி குடிநீர் 3 நாட்களுக்கு ஒருமுறையும், ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறு மூலம் ஒருநாள் விட்டு ஒருநாளும் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
ஆனால் கடந்த 3 மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்வது இல்லை. ஆனால் அருகில் உள்ள முத்துக்காபட்டி, பெருமாபாளையம், மேதரமாதேவி பகுதிகளுக்கு வழக்கம் போல் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. எங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய பயன்படுத்தி வந்த 2 ஆழ்துளை கிணறுகளும் வறண்டு விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
எனவே எங்கள் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வேறு வழியின்றி கூலித்தொழிலாளர்களான நாங்கள் ஒரு பேரல் தண்ணீரை ரூ.500-க்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். எனவே மாவட்ட கலெக்டர் தலையிட்டு எங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சீரான முறையில் எங்களுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story