குறைதீர்க்கும் கூட்டம்: அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
தேனியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராமமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு மனுக்களை அளித்தனர். கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது துரித விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், மனு அளிப்பதற்காக பூமலைக்குண்டு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வந்து இருந்தனர். அவர்கள், கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘நாங்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை. சாக்கடை தூர்வாரப்படாததால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
கொடுவிலார்பட்டி அருகில் உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்த சீனிராஜ் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனுவில், ‘ஆண்டிப்பட்டி தாலுகா குன்னூரில் கிராம நிர்வாக அலுவலர் இல்லை. இதனால், இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாய நிலங்கள் தொடர்பாக அடங்கல், சொத்து மதிப்பு சான்றிதழ் பெறவும், மாணவ, மாணவிகளுக்கு சாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் பெற முடியாமலும் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே, மக்களின் நலன் கருதி கிராம நிர்வாக அலுவலர் பணி நியமனம் செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
பெரியகுளம் அருகே உள்ள சாத்தாகோவில்பட்டியை சேர்ந்த பாண்டி மனைவி கீர்த்திகா தனது 2 பெண் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் வந்து கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், ‘நான் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டேன். நானும், எனது கணவரும் கூலிவேலை செய்து வாழ்ந்து வந்தோம். எங்களுக்கு சிவசக்தி (வயது 2), சிவன்யா (10 மாதம்) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 4-ந்தேதி எனது கணவர் மாரடைப்பால் இறந்து விட்டார். எனவே, எதிர்காலத்தில் என்னையும், எனது குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்ள அரசு உதவி செய்ய வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியிருந்தார்.
இந்திய தேசிய லீக் கட்சியின் மாவட்ட செயலாளர் அஜ்மல்கான் தலைமையில் அக்கட்சியை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், ‘தமிழகத்தில் உள்ள பல்வேறு சிறைகளில் முஸ்லிம் கைதிகள் 43 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக 14 ஆண்டுகளுக்கும் மேல் இருந்து வருகின்றனர். தமிழக அரசு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதிகள் 700-க்கும் மேற்பட்டவர்களை விடுதலை செய்தது. ஆனால், முஸ்லிம்கள் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. எனவே, இந்த 43 பேரையும் கருணை அடிப்படையில் பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்ய அரசு மற்றும் உள்துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story