மணப்பாறை பகுதியில் புயலால் கடும் பாதிப்பு: குடிநீர், மின்வசதி கேட்டு பொதுமக்கள் மறியல்


மணப்பாறை பகுதியில் புயலால் கடும் பாதிப்பு: குடிநீர், மின்வசதி கேட்டு பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 19 Nov 2018 11:00 PM GMT (Updated: 19 Nov 2018 7:16 PM GMT)

மணப்பாறை பகுதியில் குடிநீர் மற்றும் மின்வசதி கேட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

மணப்பாறை,

கஜா புயலுக்கு திருச்சி மாவட்டம், மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி, துவரங்குறிச்சியை உள்ளடக்கிய பொன்னம்பட்டி பேரூராட்சி கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த பகுதிகளில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஏராளமான வீடுகளும் இடிந்து சேதமடைந்தன.

திருச்சி மாவட்டத்தில் பெரும் சேதத்தை சந்தித்த மணப்பாறை பகுதியில் 4-வது நாளாக நேற்றும் மின்சாரம் இன்றி பொதுமக்கள் தவித்தனர். மின்வினியோகம் தடைபட்டுள்ளதால் தண்ணீர் இன்றியும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். தீவிர சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் சீரமைப்பு பணிகள் நடைபெறவில்லை.

இந்நிலையில் நேற்று காலை கோவிந்தராஜபுரம் பகுதி பொதுமக்கள் குடிநீர், மின்வசதி கேட்டு காலிக்குடங்களுடன் மணப்பாறை- கோவில்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஆசைத்தம்பி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மின்வாரிய மற்றும் நகராட்சி அதிகாரிகள் வந்து உத்தரவாதம் அளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என்று கூறி பொதுமக்கள் மறியலை தொடர்ந்தனர்.

இதையடுத்து மின்வாரிய உதவி பொறியாளர் முரளி மற்றும் நகராட்சி பொறியாளர் மனோகரன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மின்வாரியத்தின் தரப்பில் மதியத்திற்குள் மின்சாரம் வினியோகிக்கப்படும் என்று கூறப்பட்டது.

அப்போது நகராட்சி பொறியாளர் மனோகரனுக்கும் - பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதேபோல் மின்சாரம், குடிநீர் வினியோகிக்க கோரி மணப்பாறை-மதுரை சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகே அப்பகுதி மக்களும், மணப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வசிக்கும் மக்களும் மறியலில் ஈடுபட்டனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி ஜெ.ஜெ.நகர் சிதம்பரத்தான்பட்டி பகுதி மக்கள் அங்குள்ள பிரிவு சாலையிலும், சொக்கலிங்கபுரம் பகுதியை சேர்ந்த மக்கள் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையிலும், கண்ணுடையான்பட்டி ஊராட்சிக்குட்பட்ட காட்டுப்பட்டி காமராஜர் நகர் பகுதி மக்கள் மணப்பாறை-கோவில்பட்டி சாலையிலும், காமராஜர் சிலை அருகேயும் மறியலில் ஈடுபட்டனர். மணப்பாறை மஸ்தார்தெரு மக்கள் மணப்பாறை பஸ்நிலையம் அருகே திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் தீராம்பட்டி பகுதி மக்கள் திருச்சி-திண்டுக்கல் சாலையிலும், எம்.ஜி.ஆர்.நகர் பகுதி மக்கள் மணப்பாறை-விராலிமலை சாலையில், பொன்முச்சந்தி அருகே உள்ள கிராமத்திலும் மின்சாரம், குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தீர்வு காணப்படும் என்று கூறியதை அடுத்து அனைத்து இடங்களிலும் மறியல் கைவிடப்பட்டது. ஒரே நாளில் மணப்பாறை பகுதியில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி மறியலில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், கடந்த 4 நாட்களாக மின்சாரம் இன்றி இருளில் தவித்து வருகின்றோம். அதுமட்டுமின்றி அத்தியாவசிய தேவையான தண்ணீர் கிடைக்காமல் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளோம். எனவே கூடுதல் ஊழியர்களை நியமித்து மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி புயல் சீரமைப்பு பணிக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் கூறினர்.

Next Story