உச்சிப்புளி பகுதி நீர்நிலைகளுக்கு வந்துள்ள அரிய வகை பறவைகள்
உச்சிப்புளி பகுதி நீர்நிலைகளுக்கு அரிய வகை பறவைகள் வந்துள்ளன.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் 5 ஆண்டுகளுக்கு பிறகு உச்சிப்புளி, புதுமடம், மானாங்குடி, நொச்சியூருணி பகுதிகளில் நீர்நிலைகள் நிரம்பி கடல் போல் காட்சியளித்து வருகிறது.அதுபோல் புதுமடம், மானாங்குடி, நொச்சியூருணி நீர் நிலைகளில் உள்ளான் குருவி, நீர்க்காகம், கொக்குகள், நாரைகள் உள்ளிட்ட பல வகையான பறவைகள் குவிந்துள்ளன.
இந்நிலையில் உச்சிப்புளி அருகே உள்ள புதுமடம் –மானாங்குடிக்கும் இடைப்பட்ட நீர் நிலைகளில் இந்த ஆண்டு புது வரவாக அரிய வகை பறவையான கூலைக்கிடா பறவைகளும் வருகை தந்துள்ளன. நீர் நிலைகளில் நீண்ட தூரம் நீந்தியபடி மீன்களை இந்த பறவைகள் பிடிப்பதை அந்த வழியாக செல்லும் பொது மக்கள் மிகுந்த ஆச்சர்யத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
இது பற்றி மண்டபம் வனச்சரகர் சதீஷ் கூறியதாவது:–
பறக்கும் பறவைகளிலேயே கூலைக்கிடா பறவைகள் தான் மிகப் பெரியவை. இதன் தசை கெட்டியாக இல்லாமல் மென்மையாக கூழ் போன்று இருப்பதாலும்,இதை கூலைக்கடா மற்றும் கூலைக்கிடா என அழைப்பதுண்டு. இந்த பறவை தண்ணீரில் அதி வேகமாக நீண்ட நேரம் நீந்தக்கூடியது. மீனையே உணவாக உட்கொள்ளும். பெரிய உடலும், சிறிய கால்களும் இந்த பறவையின் சிறப்பம்சம். நீருக்கடியில் சுமார் 1 அடி ஆழத்தில் நீந்தி செல்லும் மீன்களை பார்க்கும் கூர்மையான கண்களை கொண்ட இந்த பறவை மீனை கண்டதும் தனது அலகை நீருக்குள் நுழைத்து மீனை கவ்வி பிடித்து விடும்.
வேடந்தாங்கல்,வேட்டங்குடி பறவைகள் சராணலயங்களில் 3 வகையான கூலைக்கிடா பறவைகளை அதிகமாக காணலாம். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பறவைகள் சரணாலயங்களுக்கு ஆண்டுதோறும் புள்ளிவாய் கூலைக்கிடா பறவைகள் வரும்.ஆனால் இந்த ஆண்டு இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பறவைகள் சராணலயத்திற்கு இதுவரை இந்த கூலைக்கிடா பறவைகள் வர தொடங்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு உச்சிப்புளி அருகே உள்ள நீர் நிலைகளில் புதிதாக கூலைக்கிடா பறவைகள் இன விருத்திக்காக வந்துள்ளன.பறவைகளை யாரும் வேட்டையாட வேண்டாம்.வேட்டையாடுபவர்களை கண்டால்பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம். பறவைகளை வேட்டையாடும் நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.