பாம்பனில் மீனவர்களின் வலையில் சிக்கிய விலை உயர்ந்த கிளி, மணிசிங்கி இறால் மீன்கள்


பாம்பனில் மீனவர்களின் வலையில் சிக்கிய விலை உயர்ந்த கிளி, மணிசிங்கி இறால் மீன்கள்
x
தினத்தந்தி 19 Nov 2018 10:15 PM GMT (Updated: 19 Nov 2018 7:29 PM GMT)

பாம்பனில் மீனவர்களின் வலையில் சிக்கிய விலை உயர்ந்த கிளி,மணிசிங்கி இறால் மீன்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன.

ராமேசுவரம்,

வங்க கடலில் உருவாகி இருந்த கஜா புயல் காரணமாக ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் விசைப்படகு மீனவர்கள் கடந்த ஒரு வாரமாக மீன் பிடிக்க செல்லாமல் இருந்தனர். இந்தநிலையில் கஜா புயல் கரையை கடந்ததை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பிறகு பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து நேற்று முன்தினம் 50–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 400–க்கும் மேற்பட்ட மீனவர்கள் தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்று இருந்தனர்.

இந்த மீனவர்கள் அனைவரும் நேற்று காலை சீலா,மாவுலா,பாறை,கடல் விரால்,நண்டு,கிளிமீன், திருக்கை,இறால் உள்ளிட்ட பல வகை மீன்களுடன் கரை திரும்பினார்கள்.

ஒரு படகில் மீனவர்களின் வலையில் விலை உயர்ந்த கிளி மற்றும் மணி சிங்கி இறால் மீன்கள் சிக்கியிருந்தன.இதில் 3 கிலோ எடைகொண்ட மணி சிங்கி இறால் மீன் ரூ.14 ஆயிரத்து 700–க்கும் மற்றும் 3 கிலோ எடை இருந்த கிளி சிங்கி இறால் மீன் ரூ.6 ஆயிரத்திற்கும் விலை போனது.

இதுபற்றி பாம்பன் மீனவர் பேட்ரிக் கூறியதாவது:–

கஜா புயலுக்கு பிறகு மீன் பிடிக்க சென்று வந்தும் மீன்கள் வரத்து சுமாராக தான் இருந்தது.ஒரு சில படகுகளில் மட்டுமே ரூ. 1½ லட்சம் மதிப்பிலும் பெரும்பாலான படகுகளில் ரூ. 85 ஆயிரம் மதிப்பிலும் மீன்கள் பிடிபட்டு இருந்தன.ஒரு படகிற்கு ஒரு முறை மீன் பிடிக்க சென்றுவர மீனவர்களுக்கான கூலி,டீசல் செலவு என மொத்த செலவுகளையும் சேர்த்து ரூ.85 ஆயிரம் வரை செலவாகிறது. இவ்வளவு செலவு செய்து மீன்பிடிக்க சென்று வந்தும் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் இல்லை.

மீனவர்கள் பிடித்து வரும் சிங்கி இறால் மீன்கள் வியாபாரிகள் மூலம் கேரளாவில் உள்ள கம்பெனிகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து விமானம் மூலமாக சிங்கப்பூர், ஹாங்காங், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். கடந்த ஒரு வாரமாக வெறிச்சோடி காணப்பட்ட பாம்பன் தெற்குவாடி கடற்கரை மீனவர்கள் மீன் பிடித்து திரும்பியதால் நேற்று களை கட்டியது.


Next Story