காதில் பூ சுற்றி மீனவர்கள் நூதன போராட்டம்


காதில் பூ சுற்றி மீனவர்கள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 19 Nov 2018 10:45 PM GMT (Updated: 19 Nov 2018 7:29 PM GMT)

ராமநாதபுரத்தில் காதில் பூ சுற்றி மீனவர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் மேலமுந்தல், கீழமுந்தல் பகுதியை சேர்ந்த எராளமான மீனவர்கள் செந்தில்குமார், மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு செயலாளர் கருணாமூர்த்தி ஆகியோர் தலைமையில் மீன்துறை அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இவர்கள் காதில் பூ சுற்றிக்கொண்டு வந்து நூதன போராட்டம் நடத்தினர்.

இதுதொடர்பாக மீனவர்கள் கூறியதாவது:– பாரம்பரியமிக்க நாட்டுப்படகு மீன்பிடிப்பில் நாங்கள் ஈடுபட்டு வரும் நிலையில் சிலர் உள்நோக்கத்துடன் வெளிமாவட்ட மீனவர்களை அழைத்து வந்து நாட்டுபடகு மீனவர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டதன் அடிப்படையில் வெளிமாவட்ட மீனவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டது.

இந்த தடை உத்தரவினை அமல்படுத்தாமல் மீன்துறை நிர்வாகம் உள்ளூர் வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. வெளிமாவட்ட படகுகளுக்கு உள்ளூர் வியாபாரிகளின் பெயரில் போலி ஆவணங்கள் தயார் செய்து அதன் அடிப்படையில் பதிவு எண் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு இதுவரை 14 மாவட்ட படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

இதன்மூலம் மாவட்ட நிர்வாகத்தின் தடை உத்தரவு வெளிப்படையாக மீறப்பட்டு வருகிறது. இதனால் உள்ளூர் மீனவர்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதோடு மோதல் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, உடனடியாக வெளிமாவட்ட மீனவர்களின் வருகையை தடைசெய்து மாவட்ட நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை மீன்துறை நிர்வாகம் முறையாக கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினர். இதன்முடிவில் மீன்துறை அதிகாரிகளிடமும், மாவட்ட கலெக்டரிடமும் மீனவர்கள் புகார் மனு அளித்தனர்.


Next Story