தாளவாடி வனப்பகுதியில் 2 வாலிபர்களை துரத்திய யானைகள்


தாளவாடி வனப்பகுதியில் 2 வாலிபர்களை துரத்திய யானைகள்
x
தினத்தந்தி 19 Nov 2018 10:45 PM GMT (Updated: 19 Nov 2018 7:33 PM GMT)

தாளவாடி வனப்பகுதியில் 2 வாலிபர்களை யானைகள் துரத்தின. அவர்கள் அகழிக்குள் குதித்து உயிர் தப்பினார்கள்.

தாளவாடி,

தாளவாடி வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், குரங்கு உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது யானைகள், மூங்கில் மரக்கிளைகளை முறித்து தின்பதற்காக சாலைகளில் உலா வருகின்றன.

இந்த நிலையில் கோவையை சேர்ந்த 6 வாலிபர்கள், தாளவாடி அருகே உள்ள தலமலை வனப்பகுதியை சுற்றிப்பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் 6 பேரும் 3 மோட்டார்சைக்கிளில் கோவையில் இருந்து சத்தியமங்கலத்துக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து பண்ணாரி வழியாக தலமலை நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

தலமலை அருகே உள்ள ராமரணை கிராமப்பகுதியில் சென்ற போது 4 காட்டு யானைகள் சாலையின் குறுக்கே நின்று கொண்டு அங்கிருந்த மூங்கல் கிளைகளை முறித்து தின்று கொண்டு இருந்தது. இதை கவனித்த அவர்கள் 6 பேரும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி ‘ஏர்ஹாரன்’ மூலம் ஒலி எழுப்பினார்கள்.

இதனால் அந்த யானைகள் பிளிறியபடி அவர்களை நோக்கி வேகமாக ஓடிவந்தன. இதனை கவனித்த 4 பேர் மோட்டார்சைக்கிளை திருப்பிக்கொண்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டனர். மற்ற 2 பேர் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு ராமரணை கிராமப்பகுதியை நோக்கி ஓடினார்கள். ஆனாலும் அந்த யானைகள் தொடர்ந்து அவர்களை விரட்டியது.

இதனால் அவர்கள் 2 பேரும் அந்தப்பகுதியில் தோண்டப்பட்ட பெரிய அகழிக்குள் (குழி) குதித்து பதுங்கிக்கொண்டனர். இதன்காரணமாக வாலிபர்களை துரத்தி வந்த யானைகள் அங்கிருந்து சென்றுவிட்டன. பின்னர் அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளின் அருகே சென்றபோது மற்ற 4 பேரும் அங்கு வந்து நின்று கொண்டு இருந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 6 பேரும் தலமலை வனப்பகுதியை சுற்றிப் பார்க்கச்சென்றனர்.

இதுகுறித்து சத்தியமங்கலம் வனத்துறையினர் கூறுகையில், ‘தாளவாடி மற்றும் தலமலைக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள் யானைகள் ரோட்டில் நிற்பதை கண்டால் வாகனத்தைவிட்டு இறங்க வேண்டாம். மேலும் வனவிலங்குகளுக்கு தொந்தரவு செய்யாத வகையில் கவனமுடன் வாகனங்களை ஓட்டிச்செல்ல வேண்டும்’ என்றனர்.

Next Story