கும்மிடிப்பூண்டி அருகே மரம் வெட்டும்போது தவறி விழுந்து தொழிலாளி பலி உறவினர்கள் சாலை மறியல்


கும்மிடிப்பூண்டி அருகே மரம் வெட்டும்போது தவறி விழுந்து தொழிலாளி பலி உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 20 Nov 2018 4:00 AM IST (Updated: 20 Nov 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் பள்ளியில் மரம் வெட்டும்போது, தவறி விழுந்து கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார். அவரது குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கும்மிடிப்பூண்டி,

பொன்னேரியை அடுத்த கிருஷ்ணாவரம் துர்கா நகரைச்சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 56). கூலித்தொழிலாளியான இவர், நேற்று காலை கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே பஞ்செட்டியில் உள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அவர், எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சுப்பிரமணி, ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

கவரைப்பேட்டை போலீசார், சுப்பிரமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் பலியான சுப்பிரமணியின் உறவினர்கள், நேற்று மாலை கிருஷ்ணாவரம் அருகே பஞ்செட்டி-பொன்னேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர்கள், பலியான சுப்பிரமணி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கும்படி கேட்டனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறியதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story