கடம்பூர் டாஸ்மாக் கடையை மூட வேண்டும்; கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


கடம்பூர் டாஸ்மாக் கடையை மூட வேண்டும்; கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 19 Nov 2018 10:45 PM GMT (Updated: 19 Nov 2018 7:41 PM GMT)

கடம்பூரில் செயல்படும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் ஏ.செல்வராஜ், புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தா.ஐமன்னன் ஆகியோர் தலைமையில் அந்த கட்சியினர் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கலெக்டர் கதிரவனிடம் தனித்தனியாக கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:–

குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திர குலத்தார், பள்ளர், வாதிரியார் ஆகிய 7 பிரிவுகள் தேவேந்திர குல வேளாளர் என்ற சமூகத்தின் உட்பிரிவுகள் ஆகும். அந்த உட்பிரிவுகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று நாங்கள் நீண்ட ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.

ஆனால் இன்றுவரை எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதனால் எங்கள் சமுதாய மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்காமல் உள்ளது. எனவே எங்கள் கோரிக்கையை விரைந்து பரிசீலனை செய்து மேற்கண்ட 7 பிரிவுகளையும் தேவேந்திர குல வேளாளர் என்று அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

தலித் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் என்.ஆர்.வடிவேல் தலைமையில் தமிழ் புலிகள் கட்சி மண்டல அமைப்பாளர் அழகர்சாமி, ஜெகஜீவன்ராம் ஜனநாயக மக்கள் இயக்க மாநில பொதுச்செயலாளர் ஆறுமுகம், தலித் விடுதலை இயக்க மாவட்ட தலைவர் பொன்சுந்தரம் மற்றும் பலர் கலெக்டர் அலுவலகத்துக்குள் கோ‌ஷங்கள் எழுப்பியபடி அம்பேத்கர் சிலையுடன் வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ‘இங்கு கோ‌ஷங்கள் எழுப்பக்கூடாது’ என்று எச்சரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் தாங்கள் கொண்டு வந்த கோரிக்கை மனுவை கலெக்டர் கதிரவனிடம் கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:–

ஈரோட்டில் அம்பேத்கர் சிலை வைக்க வேண்டும் என்று நாங்கள் பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நாங்கள் சொந்த செலவில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் அம்பேத்கருக்கு சிலை வைக்க அனுமதி வழங்க வேண்டும். மேலும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்ட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

கடம்பூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:–

கடம்பூர் புதிய பஸ் நிலையத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. மலைப்பகுதியில் உள்ள 50–க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கடம்பூர் மைய பகுதியாக உள்ளதால் இங்குள்ள பஸ் நிலையத்தில் மாணவ –மாணவிகள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் பஸ்சுக்காக காத்திருப்பது வழக்கம். அப்படி காத்திருக்கும் போது குடிமகன்களால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் குடிமகன்களால் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே கடம்பூர் புதிய பஸ் நிலையத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை உடனடியாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட் பகுதி மற்றும் மோசிக்கீரனார் வீதி ஆகிய பகுதிகளில் உள்ள ரோடுகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து மற்றும் வாகனங்களில் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. எனவே மேற்கண்ட பகுதியில் தார்ரோடு போடவேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

அந்தியூர் அருகே உள்ள ஒண்ணதுரை பகுதியை சேர்ந்த 10–க்கும் மேற்பட்டோர் கொடுத்திருந்த மனுவில், ‘நாங்கள் ஒண்ணதுரை கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். தற்போது எங்கள் பகுதியை சேர்ந்த சிலர் நாங்கள் குடியிருந்து வரும் வீட்டை காலி செய்யக்கோரி மிரட்டி வருகிறார்கள். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, நாங்கள் தொடர்ந்து அங்கு வசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

ஈரோடு வளையக்காரவீதி வி.வி.சி.ஆர். நகரை சேர்ந்த பீரான்பிஷா என்பவர் கொடுத்திருந்த மனுவில், ‘நான் வி.வி.சி.ஆர் நகரில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தேன். மழையின் காரணமாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நான் குடியிருந்த வீடு இடிந்து விழுந்து விட்டது. இதனால் வீட்டின் உரிமையாளர் என்னிடம் ரூ.1 லட்சத்து 21 ஆயிரம் வாங்கி கொண்டு வீடு கட்டி தருவதாக கூறினார்.

ஆனால் அவர் கூறியபடி வீடு கட்டித்தராமல் என்னை ஏமாற்றி விட்டார். இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் நான் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நான் கொடுத்த பணத்தை திரும்பித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

இதேபோல் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். மொத்தம் 223 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முதல் –அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நீரில் மூழ்கி இறந்த ஒருவரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலையும், நீரில் மூழ்கி இறந்த மற்றொருவரின் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையையும் கலெக்டர் கதிரவன் வழங்கினார்.

மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான கட்டுரை, கவிதை மற்றும் பேச்சு போட்டியில் வெற்றிபெற்ற 18 மாணவ –மாணவிகளுக்கு இளம் படைப்பாளர் விருதுகளும், மாவட்ட சிறுசேமிப்பு அலுவலகம் சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற 25 மாணவ –மாணவிகளுக்கு பரிசு புத்தகங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பிரபாவதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சிறு சேமிப்பு) விஜயராஜ்குமார், மாவட்ட வழங்கல் அதிகாரி ஜெயராமன் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.


Next Story