அரசு நிலம் ஆக்கிரமிப்பு: தடுக்க சென்ற கிராம உதவியாளருக்கு கத்திக்குத்து


அரசு நிலம் ஆக்கிரமிப்பு: தடுக்க சென்ற கிராம உதவியாளருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 20 Nov 2018 4:15 AM IST (Updated: 20 Nov 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்ததை தடுத்த கிராம உதவியாளரை கத்தியால் குத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர்,

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் பிச்சுவாக்கம் ஊராட்சியில் மர்ம நபர்கள் சிலர் அரசுக்கு சொந்தமான இடத்தில் தகரத்தில் கொட்டகை அமைத்து ஆற்று மணலை திருடி வருவதாக ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் ரவிச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரின் உத்தரவின் பேரில் பிச்சுவாக்கம் வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் கோபாலகிருஷ்ணன் இருவரும் நேற்று காலை அங்கு சென்று ஆய்வு நடத்தினர்.

ஆய்வில், அரசு நிலத்தை சிலர் ஆக்கிரமித்து கொட்டகை அமைத்து இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் கொட்டகையை அப்புறப்படுத்த வேண்டும் என எச்சரித்து விட்டு வந்துவிட்டனர்.

பின்னர் நேற்று மாலை அந்த இடத்தில் கொட்டகையை அகற்றிவிட்டார்களா என பார்த்து வரும்படி கிராம உதவியாளர் மாணிவாசகத்தை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

அங்கு சென்ற மாணிவாசகத்தை, மர்ம நபர்கள் சிலர் முகமூடி அணிந்து வந்து அரிப்பை ஏற்படுத்தும் செடியால் அவரின் முகத்தில் பூசி, துணியால் மூடினர்.

பின்னர் மர்ம நபர்கள் கத்தியால் மாணிவாசகத்தின் வயிற்று பகுதியில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். மாணிவாசகத்தின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கோபாலகிருஷ்ணன் சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story