மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், கலெக்டர் வழங்கினார்
மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயகாந்தன் வழங்கினார்.
சிவகங்கை,
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனைப் பட்டா, விபத்து நிவாரணம் கோருதல், பசுமை வீடு கேட்டல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை கோருதல், வங்கிக் கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல், இலவச தையல் எந்திரம் வழங்கக் கேட்டல், ஆக்கிரமிப்பு அகற்ற கோருதல், பட்டா ரத்து தொடர்பான மேல்முறையீடு, மின் இணைப்பு தொடர்பாவை மற்றும் இதரவை உள்ளிட்ட 248 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தபட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் சமூகவலைதளம், வாட்ஸ்அப், குறுஞ்செய்தி வாயிலாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது ஒரு மாதகாலத்திற்குள் உரிய தீர்வு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் வங்கிக் கடன் மானியத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் ராம பிரதீபன், அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் காளையார்கோவிலை அடுத்த அணியவயல் கிராம மக்கள் சார்பில் கலெக்டரிடம் கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், எங்கள் ஊர் கண்மாய்க்கு தண்ணீர் வரும் வரத்து கால்வாய்களை அடைத்து விட்டனர். இதனால் விவசாயம் பாதிக்கபட்டுள்ளது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.