வைகை தண்ணீரை கூடுதலாக திறந்து மேலநெட்டூர் கண்மாயை நிரப்ப வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை


வைகை தண்ணீரை கூடுதலாக திறந்து மேலநெட்டூர் கண்மாயை நிரப்ப வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 19 Nov 2018 10:30 PM GMT (Updated: 19 Nov 2018 8:06 PM GMT)

வைகை தண்ணீரை கூடுதலாக திறந்து மேலநெட்டூர் கண்மாயை நிரப்ப வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மானாமதுரை,

மானாமதுரை அருகே வேதியரேந்தலில் கடந்த 1974–ம் ஆண்டு பார்த்திபனூர் மதகு அணை கட்டப்பட்டது. ராமநாதபுர மாவட்ட பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் வேதியரேந்தல் மதகு அணையின் இடது பிரதான கால்வாய் மூலம் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மேலநெட்டூர், தெ.புதுக்கோட்டை, பிராமண குறிச்சி உள்ளிட்ட 39 கிராமங்களில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது.

இதன் பயனாக 13 ஆயிரம் எக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ராமநாதபுர மாவட்ட பாசன தேவைக்கு தண்ணீர் திறக்கப்படும் போது சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மேலநெட்டூர் கண்மாய்க்கும் தண்ணீர் திறக்க வேண்டும் என்பது விதி. ஆனால் நடைமுறையில் ராமநாதபுர மாவட்ட பொதுப்பணித்துறையினர் பெயரளவில் தண்ணீர் திறப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த 14–ந் தேதி ராமநாதபுர மாவட்ட பாசன தேவைக்கு 4 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

பார்த்திபனு£ர் மதகு அணைக்கு 17–ந் தேதி மாலை 3 மணிக்கு தண்ணீர் வந்து சேர்ந்தது. 4 ஆயிரத்து 500 கனஅடி திறக்கப்பட்டாலும் திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக வைகை ஆற்றில் 12 ஆயிரம் கன அடிதண்ணீர் வந்தது. இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கால்வாய்களில் மழை தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் மேலநெட்டூர் கண்மாய்க்கு தண்ணீர் திறக்க ராமநாதபுர மாவட்ட பொதுப்பணித்துறையினர் மறுத்து விட்டனர். இதனால் 18–ந் தேதி காலை மேலநெட்டூர் கண்மாய்க்கு வெறும் 350 கனஅடி தண்ணீர் மட்டும் பெயரளவில் திறக்கப்பட்டது.

கடந்த 5 வருடங்களாக போதிய மழையின்றி விவசாயமே இந்த பகுதியில் பாதிக்கப்பட்டதுடன் கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. விவசாய கிணறுகள் அனைத்தும் வறண்டு காணப்படுகிறது. விவசாயிகள் பலரும் கூலிவேலைக்காக வெளியூர் சென்று விட்டனர். தற்போது மழை பெய்து வைகை ஆற்றில் நீர்வரத்து இருப்பதால் பலரும் ஊர் திரும்பியுள்ளனர். பொதுப்பணித்துறையினர் நடவடிக்கையால் கண்மாய்க்கு சிறிதளவு தண்ணீரே வருகிறது.

இதுகுறித்து முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலசுப்பிரமணியன் உள்பட விவசாயிகள் கூறுகையில், கடந்த ஐந்து வருடங்களாக கடும் வறட்சி நிலவி வந்த சூழலில் வைகை அணை நிரம்பியும் தண்ணீர் திறக்கவில்லை. தற்போது அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு நீர் வரத்து உள்ளது. மேலும் மழை தண்ணீரும் சேர்ந்து வருவதால், பார்த்திபனூர் மதகு அணைக்கு 2 ஆயிரம் கன அடிக்கு மேல் தற்போது தண்ணீர் வருகிறது.

ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேலநெட்டூர் கண்மாய்க்கு தண்ணீர் திறக்க மறுத்துவிட்டனர். நெட்டூர் பாசன விவசாயிகள் காலை முதல் இரவு வரை காத்திருந்தும் அதிகாரிகள் மறுத்துவிட்டனர். வெறும் 350 கனஅடி தண்ணீரை பெயரளவிற்கு திறந்து விட்டுள்ளனர். இந்த தண்ணீரால் எந்த பயனும் இல்லை. நெட்டூர் கண்மாய்க்கு ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் ஒரு மாதத்திற்காவது திறக்கப்பட வேண்டும். அப்போது தான் கண்மாய் நிரம்ப வாய்ப்புள்ளது. எனவே வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீரை திறந்து விட வேண்டும். அந்த தண்ணீரை நெட்டூர் கண்மாயை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story