புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்


புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 20 Nov 2018 4:15 AM IST (Updated: 20 Nov 2018 1:38 AM IST)
t-max-icont-min-icon

புயல் நிவாரணபணி சரியாக நடைபெறாததை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கஜா புயல் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள கறம்பக்குடி பகுதியில் சீரமைப்பு பணிகள் சரிவர நடைபெற வில்லை என்றும் 4 நாட்கள் ஆகியும் குடிநீர், மின்சாரம் கிடைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்றும் பொதுமக்கள் புகார் செய்து வருகிறார்கள். கறம்பக்குடி பேரூராட்சி மற்றும் கிராம பகுதிகளில் 4 நாட்களாக குடிநீர் இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்கப்படுகிறது. குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே ஜெனரேட்டர் அனுப்பப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மற்ற பகுதி பொதுமக்கள், கறம்பக்குடி, பல்லவராயன்பத்தை, சூரக்காடு, சுக்கிரன்விடுதி, மழையூர், வெட்டன்விடுதி உள்ளிட்ட 10-க்கும்மேற்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொது மக்கள் சிலர் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையர் நலதேவன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) சதாசிவம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஜெனரேட்டர் மூலம் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட ஜெனரேட்டர்கள் கிராம பகுதிகளுக்கு சரக்கு ஆட்டோக்கள் மூலம் அனுப்பப்பட்டது. தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியல், முற்றுகை போராட்டங்களில் ஈடுபட்டு வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் அறந்தாங்கி அருகே பெருங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் கஜாபுயல் தாக்கியதில் வீடுகள் மற்றும் அனைத்து வகையான மரங்களும் பலத்த சேதம் அடைந்து உள்ளது. சேதம் அடைந்து நான்கு நாட்கள் ஆகியும் இந்த பகுதிக்கு குடிநீர், மின்சாரம், பால் உள்ளிட்ட அத்தியவசிய பொருட்கள் கிடைக்கவில்லை. இந்த பகுதியில் எந்த அதிகாரியும் வந்து பார்வையிடவில்லை. சேதம் மதிப்பீடு சரியாக கணக்கு செய்யவில்லை எனக் கூறி பெருங்காடு கடைவீதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி வட்டாட்சியர் கருப்பையா, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த பகுதிக்கு உடனே ஜெனரேட்டர் மூலம் தொட்டியில் தண்ணீர் ஏற்றி குடிநீர் வழங்கப்படும். மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

புதுக்கோட்டையிலிருந்து அண்டக்குளம் செல்லும் சாலையில் புத்தாம்பூர் பகுதியில் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது இந்த பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் திரும்பிய பகுதிகளிலெல்லாம் மரங்கள், மின் கம்பங்கள் உடைந்து கிடைக்கின்றன. இதனால் அந்த பகுதியில் மின் இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. புத்தாம்பூர் பகுதியில் இதுவரை எந்த ஒரு மீட்பு பணிகளையும் தொடங்கவில்லை. சாலையில் கிடந்த மரங்களை மட்டும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 4 நாட்களாக மின் இணைப்பு புத்தாம்பூர் பகுதியில் இல்லாததால் அந்த பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மின் இணைப்பு மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க வலியுறுத்தி அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் புதுக்கோட்டை அண்டக்குளம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை வட்டார வளர்ச்சி அதிகாரி ஆறுமுகம், துணை தாசில்தார் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் கிராம நிர்வாக அதிகாரி அனுராதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக லாரிகள் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

இதேபோல் கந்தர்வகோட்டை பகுதியில் குடிநீர் மற்றும் மின்சாரம் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று 13 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story