கிழக்கு கடற்கரை சாலையையொட்டி காரைக்குடி –கன்னியாகுமரி அகலரெயில்பாதை திட்டம் ரத்து; ரெயில்வே வாரியம் முடிவு


கிழக்கு கடற்கரை சாலையையொட்டி காரைக்குடி –கன்னியாகுமரி  அகலரெயில்பாதை திட்டம் ரத்து; ரெயில்வே வாரியம் முடிவு
x
தினத்தந்தி 20 Nov 2018 4:00 AM IST (Updated: 20 Nov 2018 1:57 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி–கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரை சாலையை யொட்டி அகலரெயில்பாதை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய ரெயில்வே வாரியம் முடிவு செய்து உள்ளதாக ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விருதுநகர்,

தென் மாவட்டங்களில் உள்ள கடலோர பகுதியில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் காரைக்குடி– கன்னியாகுமரி இடையே 560 கிலோ மீட்டர் தூர அகல ரெயில்பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து கடந்த 2008–ம் ஆண்டு ஆய்வு பணி தொடங்கப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கை ரெயில்வே வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. மாநில அரசிடம் இருந்து இது தொடர்பாக எவ்வித உதவியும் கிடைக்காத நிலையில் இத்திட்டத்தினை பற்றி எவ்வித முடிவும் எடுக்காமல் ரெயில்வே வாரியம் அமைதி காத்தது.

மீண்டும் கடந்த 2013–ம் ஆண்டு இத்திட்டத்தினை செயல்படுத்துவது தொடர்பாக ரெயில்வே வாரியம் மறு பரிசீலனை செய்தது. இந்த அகல ரெயில்பாதை காரைக்குடி, ராமேஸ்சுவரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரி வரை 560 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இந்த ரெயில்பாதை அமைக்கப்பட்டால் மதுரை–நாகர்கோவில் இடையே உள்ள ரெயில்பாதையில் ரெயில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும், பயணதூரமும் குறையும் என கூறப்பட்டது.

ஆனாலும் ரெயில்வே வாரியம் இந்த ரெயில்பாதையால் போதிய வருமானம் இருக்க வாய்ப்பு இல்லை என்றும், மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லை என்ற காரணத்தை காட்டி திட்டத்தினை ரத்து செய்துவிட்டது. தற்போது உள்ள நிலையில் மாநில அரசின் ஒத்துழைப்பு கிடைத்தால் மட்டுமே புதிய ரெயில் பாதை திட்டங்களை அமுல்படுத்த ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. காரைக்குடி– கன்னியாகுமரி இடையேயான அகலரெயில்பாதை திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கடலோரப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ரெயில் வசதி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story