மதுரை மண்டல புற்றுநோய் மையத்திற்கு மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் தலைமை பொறியாளர் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு


மதுரை மண்டல புற்றுநோய் மையத்திற்கு மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் தலைமை பொறியாளர் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 19 Nov 2018 10:45 PM GMT (Updated: 19 Nov 2018 8:30 PM GMT)

மதுரை மண்டல புற்றுநோய் மையத்திற்கு மின் இணைப்பு வழங்குவதில் தாமதம், தலைமை பொறியாளர் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரை பாலரெங்காபுரத்தில் மண்டல புற்றுநோய் மையம் திறக்கக்கோரி ஆனந்தராஜ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில், பாலரெங்காபுரத்தில் மண்டல புற்றுநோய் மைய கட்டுமானப்பணிகள் 75 சதவீதம் முடிந்துவிட்டது. அந்த விரைவில் மையம் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்தநிலையில் ஐகோர்ட்டில் அரசு உறுதி அளித்தபடி, பாலரெங்காபுரத்தில் மண்டல புற்றுநோய் மையம் இதுவரை திறக்கப்படவில்லை. எனவே கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாத சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் மருதுபாண்டியன் ஆகியோர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆனந்தராஜ் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பாலரெங்காபுரம் புற்றுநோய் மையத்துக்கு மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விசாரணை முடிவில், மதுரை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் வருகிற 27–ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story