தமிழகத்தில் “மக்களின் துயர் துடைக்கும் துறையாக கூட்டுறவுத்துறை விளங்குகிறது” அமைச்சர் ராஜலட்சுமி பேச்சு
தமிழகத்தில் மக்களின் துயர்துடைக்கும் துறையாக கூட்டுறவுத்துறை விளங்குகிறது என நெல்லையில் நடந்த கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் ராஜலட்சுமி பேசினார்.
நெல்லை,
65-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் கடந்த 14-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. கூட்டுறவு வார விழாவில் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கும் மாவட்ட அளவிலான விழா நேற்று நெல்லை கொக்கிரகுளத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார்.
எம்.பி.க்கள். முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த், செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு துணைப்பதிவாளர் முத்துசாமி கூட்டுறவு உறுதி மொழி வாசித்தார். மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் குருமூர்த்தி வரவேற்று பேசினார். இணைப்பதிவாளர் பிரியதரிசினி திட்டத்தை பற்றி விளக்கி பேசினார்.அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களை வழங்கியும், ரூ.1 கோடியே 87 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசினார்.
அவர் பேசுகையில், “தமிழக அரசின் கூட்டுறவு துறையின் மூலம் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு துறையின் சார்பில் விவசாயிகளுக்கு புதிய பயிர்க்கடன் ரூ.8 ஆயிரம் கோடி வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மக்களின் துயர் துடைக்கும் துறையாக கூட்டுறவுத்துறை விளங்குகிறது. விவசாயிகளை பாதுகாக்கும் துறையாகவும் உள்ளது. நெல்லை மண்டல கூட்டுறவுத்துறையின் சார்பில் ரூ.120 கோடி பயிர்க்கடனும், ரூ.427 கோடி நகைக்கடனும், ரூ.120 கோடி மத்திய காலகடனும், ரூ.7 கோடி மாற்றுத்திறனாளிகளுக்கு கடனும், ரூ.2½ கோடி மகளிர் கடனும், ரூ.16 கோடி சுய உதவிக்குழு கடனும், ரூ.5 கோடி தானிய ஈட்டுக்கடனும் வழங்கப்பட்டு உள்ளது“ என்றார்.
விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. சக்திவேல்முருகன், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், சூப்பர் மார்க்கெட் முன்னாள் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, சிறுபான்மை பிரிவு செயலாளர் மகபூப்ஜான், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் பெரியபெருமாள், ரெட்டியார்பட்டி நாராயணன், சங்கரன்கோவில் நகரசபை முன்னாள் தலைவர் ராஜூ என்ற கண்ணன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் செந்தில்வேல்முருகன் மற்றும் கூட்டுறவுத்துறை துணை பதிவாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், துணை பதிவாளர் ரியாஸ் அகமது நன்றி கூறினார்.
Related Tags :
Next Story