டாஸ்மாக் ஊழியர்களிடம் ரூ.1¾ லட்சம் கொள்ளை வழக்கில் 5 பேர் கைது


டாஸ்மாக் ஊழியர்களிடம் ரூ.1¾ லட்சம் கொள்ளை வழக்கில் 5 பேர் கைது
x
தினத்தந்தி 20 Nov 2018 4:30 AM IST (Updated: 20 Nov 2018 2:12 AM IST)
t-max-icont-min-icon

சோமரசம்பேட்டை அருகே டாஸ்மாக் ஊழியர்களிடம் ரூ.1¾ லட்சம் கொள்ளை வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சோமரசம்பேட்டை,

திருச்சி- தோகைமலை சாலையில் தாயனூர் வாழை ஆராய்ச்சி மையம் அருகில் அரியாவூர் ஒத்தக்கடை பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் முசிறியை சேர்ந்த திரவியம் என்பவர் மேற்பார்வையாளராக இருந்து வருகிறார். தமிழரசன், குணசேகரன், மணி ஆகியோர் விற்பனையாளராக இருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 28-ந் தேதி இரவு டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் விற்பனையை முடித்து கடையை மூடினர். பின்னர் விற்பனை மூலம் கிடைத்த ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு விற்பனையாளர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி வந்தனர்.

அப்போது சோமரசம்பேட்டையை அடுத்துள்ள தாயனூர் வாழை ஆராய்ச்சி மையம் அருகே 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர், சாலையில் நின்று கொண்டு விற்பனையாளர்கள் வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். அவர்கள் வண்டியை நிறுத்திய உடன் கொள்ளையர்கள் கத்தி, அரிவாளை காட்டி, அவர்களிடம் இருந்த பணப்பையை பறிக்க முயன்றனர். ஆனால் விற்பனையாளர்கள் பணப்பையை தராமல் கொள்ளையர்களிடம் போராடினார்கள். மேலும் பணப்பையுடன் விற்பனையாளர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிக்க முயன்றனர்.

ஆனால் கொள்ளையர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் விற்பனையாளர்கள் 3 பேரின் கண்களிலும் மிளகாய் பொடியைத் தூவிவிட்டு பணம் இருந்த பையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இச்சம்பவம் பற்றி டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் திரவியம் சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையில் தனிப்படை அமைத்து, கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையில் தனிப்படை போலீசார் சுண்ணாம்புகாரன்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 மோட்டார் சைக்கிள்களில் 5 பேர் வந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள், முதலைப்பட்டியைச் சேர்ந்த சாமிக்கண்ணு மகன் ஜெயகாந்தன்(வயது 22), கோப்பு கிராமத்தைச் சேர்ந்த ரெங்கநாதன் மகன் அசோக் குமார்(23), கொடியாலம் சுப்பராயன்பட்டி ராசு மகன் சங்கப்பிள்ளை(25), கொசூர் அர்ச்சுனன் மகன் சுரேஷ்(24), நல்லதம்பி மகன் சுப்பிரமணியன்(25) என்பதும், இதில் ஜெயகாந்தன், சங்கப்பிள்ளை மீது ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளதும், டாஸ்மாக் கடை விற்பனையாளர்களிடம் இருந்து பணத்தை பறித்தது அவர்கள் தான் என்பதும் தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தியதில், கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் நெய்தலூர் காலனி, லாலாபேட்டை, வாழ்வார்மங்கலம் ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் கடை ஊழியர்களிடமும் பணத்தை பறித்ததாக, அவர்கள் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

இதையடுத்து அவர்கள் 5 பேரிடம் இருந்தும் 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தை போலீசார் கைப்பற்றினர். அவர்களை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில், கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை பற்றிய விவரங்களை சேகரித்து அவர்களை பிடிக்க போலீசார் விரைந்துள்ளனர்.

டாஸ்மாக் ஊழியர்களிடம் இருந்து பணத்தை பறித்து சென்றவர்களை போலீசார் விரைந்து கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story