அய்யன்கொல்லி அருகே: வனத்துறையினரை துரத்திய காட்டுயானைகள்


அய்யன்கொல்லி அருகே: வனத்துறையினரை துரத்திய காட்டுயானைகள்
x
தினத்தந்தி 20 Nov 2018 3:30 AM IST (Updated: 20 Nov 2018 2:20 AM IST)
t-max-icont-min-icon

அய்யன்கொல்லி அருகே வனத்துறையினரை காட்டுயானைகள் துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே அத்திச்சால் பகுதியில் கடந்த சில நாட்களாக 3 காட்டுயானைகள் முகாமிட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அவை அப்பகுதியில் பயிரிட்டுள்ள வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதனால் காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்பேரில் காட்டுயானைகளை விரட்டும் பணியில் சேரம்பாடி வனச்சரகர்கள் சின்னதம்பி, கணேசன் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கடந்த 2 நாட்களாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் யானைகள் அங்கிருந்து செல்லவில்லை. இதனால் வனத்துறையினர் தொடர்ந்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே மலப்பொட்டு பகுதிக்கு செல்லும் சாலையில் அந்த காட்டுயானைகள் சென்றன. அவைகளை பின்தொடர்ந்து வனத்துறையினர் விரட்டி கொண்டு இருந்தனர். அப்போது திடீரென காட்டுயானைகள் வனத்துறையினரை துரத்தின. உடனே நாலாபுறமும் சிதறி ஓடியவாறு மயிரிழையில் வனத்துறையினர் உயிர் தப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காட்டுயானைகளை விரட்டும் பணி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் பொதுமக்கள் உதவியுடன் காட்டுயானைகளை விரட்டும் பணி தொடங்கப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, காட்டுயானைகளால் பெரும் பிரச்சினை ஏற்படுகிறது. வீடு, பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. சில சமயங்களில் மனிதர்களை துரத்துகிறது. இதனால் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை உள்ளது. எனவே காட்டுயானைகள் ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story