வீட்டின் பூட்டை உடைத்து 63 பவுன் நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


வீட்டின் பூட்டை உடைத்து 63 பவுன் நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 20 Nov 2018 3:45 AM IST (Updated: 20 Nov 2018 2:24 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 63 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருச்சி,

திருச்சி தில்லைநகர் 3-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் புலேந்திரன்(வயது 60). இவருடைய பேத்தியின் திருமணம் மத்திய பஸ் நிலைய பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதற்காக புலேந்திரன் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருமணத்துக்கு சென்று இருந்தார். அப்போது அவருடைய வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து 63 பவுன் நகைகளை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றனர். சிறிதுநேரம் கழித்து பகல் 2.30 மணி அளவில் புலேந்திரன் வீடு திரும்பினார்.

போலீசார் விசாரணை

வீட்டுக்குள் சென்றதும், அங்கு பீரோ உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் பின்பக்க பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே வந்து கைவரிசை காட்டியது தெரியவந்தது. உடனடியாக இது குறித்து தில்லைநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விரல்ரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினார்கள். பட்டப்பகலில் வீடு புகுந்து 63 பவுன் நகை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story