நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆண் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை


நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆண் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 20 Nov 2018 4:30 AM IST (Updated: 20 Nov 2018 3:43 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுல் நூற்றுக்கணக்கான மாணவ- மாணவிகள் பயின்று வருகிறார்கள். ஆஸ்பத்திரியில் ஏராளமானோர் உள்நோயாளியாகவும், தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் டாக்டர்கள், நர்சுகளுக்கான குடியிருப்புகள் அமைந்துள்ளன.

மேலும் இந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் பல இடங்களில் புதர்மண்டி கிடக்கின்றன. இந்தநிலையில் நேற்று காலை டாக்டர்கள் மற்றும் நர்சுகள் குடியிருப்பு அமைந்துள்ள பகுதியில் இருந்து சிறிது தொலைவில் உள்ள பெரிய பள்ளம் ஒன்றில் ஒரு ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடப்பதாகவும், இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் அங்கு சென்ற கட்டிட தொழிலாளர்கள் தகவல் தெரிவித்தனர். உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின்பேரில் ஆசாரிபள்ளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. கை- கால்கள் தசைகள் இன்றி எலும்புகளாக காட்சி அளித்தன. 10 நாட்களுக்கு முன்பாக அந்த நபர் இறந்திருக்க வேண்டும் என்று போலீசாரால் சந்தேகிக்கப்படுகிறது. மேலும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர் அழுகிய உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. அவரை யாராவது கொலை செய்து உடலை இங்கு கொண்டு வந்து வீசிச் சென்றார்களா? அல்லது பிணமாக கிடந்தவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் யாராவது அங்கு சென்று பள்ளத்தில் விழுந்து இறந்தாரா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் ஆசாரிபள்ளம் பகுதியிலோ, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வந்தவர்களோ யாராவது காணாமல் போய் இருக்கிறார்களா? என்ற விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story