ரவுடி கொலை வழக்கில் தலைமறைவான கள்ளக்காதலி சென்னை கோர்ட்டில் சரண் மேலும் 2 பேரை தனிப்படை தேடுகிறது
வேலூர் சத்துவாச்சாரியில் தலையில் அம்மிக்கல்லை போட்டு ரவுடியை கொலை செய்துவிட்டு தலைமறைவான கள்ளக்காதலி தண்டுமாரி சென்னை எழும்பூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். மீதமுள்ள 2 பேரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வேலூர்,
வேலூர் சத்துவாச்சாரி வ.உ.சி.நகரை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 32). ரவுடியான இவர்மீது கொலை, திருட்டு, வழிப்பறி உள்பட 24 வழக்குகள் உள்ளன. இவருக்கும் வள்ளலாரில் டிபன் கடை நடத்தி வரும் தண்டுமாரிக்கும் (40) ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.
தங்கராஜ் கடந்த 17-ந் தேதி இரவு குடித்து விட்டு தண்டுமாரி வீட்டிற்கு சென்றார். அப்போது இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த தண்டுமாரி, அவரது மகன் போடி, தண்டுமாரியின் தங்கை கன்னியம்மாள் ஆகிய 3 பேரும் சேர்ந்து தங்கராஜை தாக்கினர். இதில், மயங்கி கீழே விழுந்த அவரது தலையில் வீட்டில் இருந்த அம்மிக்கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்தனர். பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது தொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில் தங்கராஜை கொலை செய்து விட்டு தலைமறைவான 3 பேரையும் பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சிபிசக்ரவர்த்தி உத்தரவிட்டார்.
அதையடுத்து வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன் மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்ட தங்கராஜின் கள்ளக்காதலி தண்டுமாரி சென்னை எழும்பூர் கோர்ட்டில் நேற்று மாலை சரண் அடைந்தார். மீதமுள்ள 2 பேரையும் தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story