சேத விவரங்களை முறையாக கணக்கெடுக்காததால் ஆத்திரம்: கொட்டும் மழையில் கிராம மக்கள் சாலை மறியல்


சேத விவரங்களை முறையாக கணக்கெடுக்காததால் ஆத்திரம்: கொட்டும் மழையில் கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 19 Nov 2018 11:00 PM GMT (Updated: 19 Nov 2018 9:33 PM GMT)

பட்டுக்கோட்டை, திருச்சிற்றம்பலம் பகுதியில் புயல் சேத விவரங்களை முறையாக கணக்கெடுக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருச்சிற்றம்பலம், ஒரத்தநாடு, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் ‘கஜா’ புயல் மக்களின் வாழ்வாதாரங்களை சிதைத்துள்ளது. வீடுகள் கூரைகளின்றி வானம் பார்த்தபடி காட்சி அளிக்கின்றன. தென்னந்தோப்புகள் மரங்கள் இன்றி வெறிச்சோடி விட்டன.

இந்த பகுதிகளில் புயலால் ஏற்பட்ட சேதங்கள் எவ்வளவு என்பதை அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றும், பெயரளவுக்கு கணக்கெடுப்பு நடத்தப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

புயல் சேத விவரங்களை முறையாக கணக்கெடுப்பு செய்யாததால் ஆத்திரம் அடைந்த பட்டுக்கோட்டை, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கொட்டும் மழையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டுக்கோட்டை ஆலடிக்குமுளையில் நடந்த சாலை மறியலில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். மறியலின்போது சாலையின் குறுக்கே மரக்கிளைகள் போடப்பட்டிருந்தன. மரங்கள் எவ்வளவு சாய்ந்துள்ளன? என்பதை கண்டறிந்து இழப்பீடு வழங்க வேண்டும். மருத்துவ வசதிகள் செய்து தர வேண்டும் என போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் சமரசம் செய்ய முயன்றும் பலனில்லை. மறியல் காரணமாக புயல் நிவாரண முகாம்களுக்கு சென்று கொண்டிருந்த டாக்டர்கள் சென்ற வேன், மின்கம்பங்களை ஏற்றி சென்ற லாரிகள், வெளியூர்களில் இருந்து சீரமைப்பு பணிக்காக ஊழியர்களை ஏற்றி வந்த வேன்கள் அணிவகுத்து நின்றன.

மறியலில் ஈடுபட்டவர்களிடம் நிவாரண பணிக்கு வந்த டாக்டர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம பகுதிகளுக்கு மருத்துவ உதவி அளிக்க சென்று கொண்டிருப்பதால் வழி விடும்படி கூறினர். ஆனால் கிராம மக்கள், மருத்துவ குழுவினர் இங்கு இருந்தால் தான் அதிகாரிகள் சேதங்களை பார்வையிட வருவார்கள் என கூறி வழிவிட மறுத்து விட்டனர். இதனால் நிவாரண முகாம்களுக்கு செல்ல முடியாமல் டாக்டர்கள் தவித்தனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னரே டாக்டர்கள் அங்கிருந்து செல்ல பொதுமக்கள் அனுமதித்தனர்.

இதைத்தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களை சமாதானம் செய்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியல் காரணமாக 2½ கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோல திருச்சிற்றம்பலம் கடைவீதியில் அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பு நடத்தாததை கண்டித்தும், குடிநீர்-மின்சாரம் வினியோகம் வேண்டும். புயலில் விழுந்த தென்னை மரங்களை கணக்கெடுத்து இழப்பீடு வழங்க வேண்டும். மண்எண்ணெய் வழங்க வேண்டும்.

ஒரு தென்னை மரத்துக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின்போது புயல் காற்றில் பறந்த தகர மேற்கூரைகள் சாலையில் போட்டு வைத்து இருந்தனர்.

மறியலில் ஈடுபட்டவர்களுடன் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அதிகாரிகள் வந்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம் என பொதுமக்கள் கூறினர். இந்த போராட்டம் கொட்டும் மழையில் நடந்தது. இந்த நிலையில் வருவாய் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சிலர் ஆவேசமாக வாக்குவாதம் செய்து, அதிகாரிகளை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து, ஜெனரேட்டர் வசதி செய்து தரப்படும். மண்எண்ணெய் வழங்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பேரில் மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக பட்டுக்கோட்டை-அறந்தாங்கி சாலையில் காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் 15 கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Next Story