டயர் வெடித்ததில் தாறுமாறாக ஓடிய கார், பஸ் மீது மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி


டயர் வெடித்ததில் தாறுமாறாக ஓடிய கார், பஸ் மீது மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
x
தினத்தந்தி 20 Nov 2018 4:30 AM IST (Updated: 20 Nov 2018 3:39 AM IST)
t-max-icont-min-icon

டயர் வெடித்ததில் தாறுமாறாக ஓடிய கார் பஸ் மீது மோதியதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியானார்கள்.

திருச்சி,

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சிறுத்தொண்டநல்லூரை சேர்ந்தவர் ரமேஷ் ரத்தினபாண்டியன் (வயது 45), விவசாயி. சென்னையில் உறவினர் ஒருவர் இறந்ததால் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ரமேஷ் ரத்தினபாண்டியன் தனது குடும்பத்துடன் காரில் நேற்று அதிகாலை சென்னைக்கு புறப்பட்டார்.

காரை அவரே ஓட்டினார். அவரது மனைவி மேத்தலின் சோபனா (40), தாய் சாந்தி (60), மகள் ஷெரின் (11), மகன் ஷியாம் (13) ஆகியோர் உடன் வந்தனர். கார் காலை 7.20 மணி அளவில் திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே வந்துகொண்டிருந்தது.

அப்போது காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்து கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரையும் தாண்டி, மறுபுறம் எதிரே திருச்சியில் இருந்து பொன்னமராவதி நோக்கி சென்ற ஒரு அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது. காரில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

இந்த விபத்தில் சாந்தியின் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே இறந்தார். மேத்தலின் சோபனாவும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பலியானார். ரமேஷ் ரத்தினபாண்டியனும், அவரது மகன், மகளும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இந்த விபத்தை கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே புதுக்கோட்டை நோக்கி காரில் சென்றுகொண்டிருந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விபத்தை பார்த்ததும் உடனடியாக காரை நிறுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டார். ரமேஷ் ரத்தினபாண்டியனை மீட்டு ஆம்புலன்சிலும், ஷெரின், ஷியாம் ஆகியோரை தனது பாதுகாப்பு வாகனத்திலும் ஏற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

ஆனால் வழியிலேயே ரமேஷ் ரத்தினபாண்டியன், ஷெரின் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. ஷியாமுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மணிகண்டம் போலீசார் விரைந்து சென்று இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்தில் கார் முழுவதும் நொறுங்கி சேதமடைந்ததோடு, அரசு பஸ்சின் முன்பக்கமும் பலத்த சேதமடைந்தது. அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உடனடியாக மாற்று பஸ் ஏற்பாடு செய்து அதில் மற்ற பயணிகளை அனுப்பிவைத்தார்.

இந்த விபத்து தொடர்பாக மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story