விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் பெலகாவி கூட்டத்தொடரில் தீவிர போராட்டம் எடியூரப்பா எச்சரிக்கை


விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் பெலகாவி கூட்டத்தொடரில் தீவிர போராட்டம் எடியூரப்பா எச்சரிக்கை
x
தினத்தந்தி 20 Nov 2018 5:14 AM IST (Updated: 20 Nov 2018 5:14 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் பெலகாவி கூட்டத்தொடரில் தீவிர போராட்டம் நடத்தப்படும் என்று பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா எச்சரித்துள்ளார்.

பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெலகாவி, விஜயாப்புரா, பாகல்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் சர்க்கரை ஆலைகள் பாக்கி வைத்துள்ள நிலுவைத்தொகையை பெற்றுத்தரக்கோரி கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கரும்பு விவசாயிகளுக்கு போலீசார் தொல்லை கொடுத்துள்ளனர். விவசாயிகளை போலீசார் தாக்கியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண் விவசாயியை முதல்-மந்திரி குமாரசாமி தரக்குறைவாக பேசியுள்ளார். முதல்-மந்திரி பதவியில் இருக்கும் குமாரசாமி பொறுப்புடன் பேச வேண்டியது அவசியமாகும். விவசாய பெண்ணை தரக்குறைவாக பேசிய முதல்-மந்திரி குமாரசாமி கண்டிப்பாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

விவசாயிகள் கஷ்டத்தில் இருந்து வருகிறார்கள். அவர்களது கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். சர்க்கரை ஆலைகள் நிலுவைத்தொகையை பெற்றுக்கொடுக்க முதல்-மந்திரி குமாரசாமி முன்வர வேண்டும். இவற்றை எல்லாம் விட்டுவிட்டு போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை ஒடுக்க நினைப்பது, விவசாயிகளை ரவுடிகள், கொள்ளையர்கள் என்று கூறுவது எந்த விதத்தில் சரியானது என்பதை குமாரசாமியே தெரிவிக்க வேண்டும்.

விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து மாநிலம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த அரசு விவசாயிகளின் அரசு என்று அடிக்கடி கூறும் குமாரசாமி, அவர்களது கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் பா.ஜனதா வீதியில் இறங்கி போராடும்.

பெலகாவியில் நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடரில் சபைக்கு உள்ளேயும், வெளியேயும் பா.ஜனதா சார்பில் தீவிர போராட்டம் நடத்தப்படும். அதுகுறித்து நாளை (அதாவது இன்று) ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும். விவசாயிகளுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் பா.ஜனதா சார்பில் போராட்டம் நடத்தப்படும். விவசாயிகளை ரவுடிகள் என்று கூறிய தனது மகனுக்கு ஆதரவாக தேவேகவுடாவும் பேசி இருப்பது சரியல்ல.

விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக பொய் வாக்குறுதி கூறி முதல்-மந்திரி குமாரசாமி ஏமாற்றி வருகிறார். விவசாய கடன் தள்ளுபடி செய்யாததால் மாநிலத்தில் 200 விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். விவசாய கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய, ரூபாய் நோட்டு அச்சடிக்கும் எந்திரம் தங்களிடம் உள்ளதா? என்று மந்திரி எச்.டி.ரேவண்ணா கூறியுள்ளார்.

ரூபாய் நோட்டு அச்சடிக்கும் எந்திரம் இல்லையெனில் விவசாய கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்று 4 மாதங்களாக குமாரசாமி கூறுவது ஏன்? என்பது குறித்து எச்.டி.ரேவண்ணா பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story