பெண் விவசாயி பற்றி சர்ச்சை பேச்சு: நான் கூறிய வார்த்தையை திரும்ப பெற்றுக்கொள்கிறேன் முதல்-மந்திரி குமாரசாமி பேட்டி


பெண் விவசாயி பற்றி சர்ச்சை பேச்சு: நான் கூறிய வார்த்தையை திரும்ப பெற்றுக்கொள்கிறேன் முதல்-மந்திரி குமாரசாமி பேட்டி
x
தினத்தந்தி 20 Nov 2018 5:21 AM IST (Updated: 20 Nov 2018 5:21 AM IST)
t-max-icont-min-icon

கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து,பெண் விவசாயி குறித்து நான்கூறிய வார்த்தையை திரும்ப பெற்றுக்கொள்கிறேன் என்று முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

பெலகாவியில் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகளை ரவுடிகள், கொள்ளையர்கள் என்றும், ஒரு பெண் விவசாயி பற்றி சர்ச்சைக்குரிய விதமாகவும் முதல்-மந்திரி குமாரசாமி பேசி இருந்தார். இதற்கு விவசாய சங்கங்களை சேர்ந்தவர்களும், பா.ஜனதாவினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பெண் விவசாயியிடம் குமாரசாமி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விவசாய சங்கத்தினரும், பா.ஜனதா தலைவர்களும் வலியுறுத்தினர்.

இதுகுறித்து பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கரும்பு விவசாயிகள் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் கரும்பு விவசாயிகள் மட்டும் அல்ல, எல்லா விவசாயிகளும் கவுரவமாக நடத்தப்படுகிறார்கள். அப்படி இருந்தும் கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்பது தெரியவில்லை. என்ன காரணத்திற்காக விவசாயிகள் பெயரில் போராட்டம் நடத்துகிறார்கள்.

என்றாலும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் மாவட்ட கலெக்டர்கள் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும்படி உத்தரவிட்டுள்ளேன். இந்த அரசு விவசாயிகளுக்கானது. ஒரு சின்ன பிரச்சினையாக இருந்தாலும், அதனை தீவிரமாக எடுத்து செயல்பட்டு வருகிறேன். நான் யாருடைய பேச்சையும் கேட்டு செயல்படவில்லை. எந்தவொரு மேடையிலும் இதை பற்றி தான் பேச வேண்டும் என்று திட்டமிட்டு பேசுவது கிடையாது. ஒவ்வொரு மேடையிலும் எச்சரிக்கையுடன் தான் பேசி வருகிறேன்.

விவசாயிகள் உள்பட ஒவ்வொரு தனிமனிதரும் இந்த மாநிலத்தில் போராடுவதற்கு உரிமை உள்ளது. அதற்காக கரும்பு விவசாயிகள் என்ற பெயரில் பெலகாவி சுவர்ண சவுதாவுக்குள் லாரிகளுடன் செல்வது, முன்பக்க கதவை கற்களால் உடைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. விவசாயிகளுடன் பேசுவதற்காக பெலகாவி வருவதாக நான் சொன்னது உண்மை தான். ஆனால் நேரம் கிடைத்தால் வருவேன் என்று தான் கூறி இருந்தேன். நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.

மந்திரிசபை கூட்டம் 4 வாரங்களாக நடத்தப்படாமல் உள்ளது. 40 திட்டங்கள் குறித்து மந்திரிசபையில் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டியது இருந்தது. அதனால் பெலகாவிக்கு என்னால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. விவசாயிகளுக்கு ஆதரவாக எப்போதும், எந்த சந்தர்ப்பத்திலும் இந்த அரசு கூடவே இருக்கும். விவசாயிகளின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க இந்த அரசு தயாராக உள்ளது. விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க நான் முன்னுரிமை கொடுத்து வருகிறேன்.

பெலகாவியில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண், என்னை தரக்குறைவாக பேசி தி்ட்டினார். முதல்-மந்திரி என்று கூட அந்த பெண் மதிப்பு அளிக்கவில்லை. என்னை திட்டுவது 6½ கோடி மக்களை திட்டுவதற்கு சமமாகும். அதனால் தான் அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த பெண் பற்றி பேசும் போது தாய் என்று தான் கூறினேன். 4 ஆண்டு களாக போராட்டத்தில் ஈடுபடாமல் எங்கிருந்த தாய் என்று தான் சொன்னேன். ஒரு தாய்க்கு சமமாக தான் அந்த பெண்ணை பற்றி பேசினேன். பொதுவாக கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் பேசுவதை போல தான் நானும் பேசினேன். நான் பேசியதால், அதனை பெரிதுபடுத்தி விட்டார்கள்.

தாய் என்று கூறிவிட்டு ஒரு பெண்ணை தவறாக பேச முடியுமா? என்பதை நினைத்து பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கூறுகிறார்கள். யாருடைய மனதையும் புண்படுத்த நான் விரும்பவில்லை. அந்த பெண் பற்றி நான் கூறிய வார்த்தையை திரும்ப பெற்றுக்கொள்கிறேன். எனது கருத்து அவரை புண்படுத்தி இருந்தால், நான் ராஜினாமா செய்யக்கூட தயாராக இருக்கிறேன்.

கரும்பு விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுடன், அவர்களுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை பெற்று கொடுக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். நான் ஏதோ மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக எடியூரப்பா பேசியுள்ளார். பெலகாவி சுவர்ணசவுதா கூட்டத்தொடரில் விவசாயிகள் பிரச்சினை குறித்து பேசுவதாக எடியூரப்பா கூறியுள்ளார். அவருக்கு கூட்டத்தொடரிலேயே பதிலளிக்க தயாராக உள்ளேன். எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது, இந்த மாநிலத்திற்கும், விவசாயிகளுக்கும் என்ன செய்தார் என்று சொல்ல முடியுமா?்்.

பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக அரசு விவசாய கடனை தள்ளுபடி செய்யவில்லை என்று குற்றச்சாட்டு கூறியுள்ளார். தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசு முன்வராதது ஏன்? என்பது குறித்து பிரதமர் பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story